வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

செய்தியறிக்கை



தாக்குதலுக்குள்ளான வாகனமொன்று
தாக்குதலுக்குள்ளான வாகனமொன்று
பாகிஸ்தானில் தொடர் குண்டுத் தாக்குதல்கள்- 45 பேர் பலி
பாகிஸ்தானின் லாஹூர் நகரில் மூன்று தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முன்னதாக தற்கொலைக் குண்டுதாரிகள் நடத்திய இரண்டு தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிய இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தென்படுகின்ற இந்த தாக்குதல்கள் இரண்டும் சில வினாடிகள் இடைவெளியில் நடந்தன. இவற்றில் மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பலர் சிப்பாய்கள் ஆவர். ஆனால் பொதுமக்களே அதிகமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வாரத்தில் லாஹூர் நகரம் தற்கொலைத் தாக்குதலாளிகளால் தாக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.


''லீமன் பிரதர்ஸ் வங்கி அரச நிதியுதவியை நாடுவதற்கு பல வாரங்களுக்கு முன்னரே வங்குரோத்து ஆகியிருந்தது''– நீதிமன்ற விசாரணை அறிக்கை
லீமன் பிரதர்ஸ் வங்கி
லீமன் பிரதர்ஸ் வங்கி
அமெரிக்க முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை, அந்நிறுவனம் தனது நிஜமான நிதி நிலைமையை மறைத்து வந்திருந்தது என்று கண்டறிந்துள்ளது.
தாங்கள் திவாலாகிவிட்டதாக செப்டம்பர் 2008ல் அது அறிவித்து அரசாங்கத்தின் உதவியை நாடுவதற்கு பல வாரங்கள் முன்பே அது வங்குரோத்து நிலையில்தான் இருந்துவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீமன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ச்சி கண்டது உலக நிதி நெருக்கடியைத் தூண்டிவிட்டிருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.
இந்த நிறுவனம் தவறுதலான கணக்கு வழக்குகளை வெளியிட்டு தாங்கள் வலுவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டது என்றும், அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகாரிகளும் தவறுதலான நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டுவந்தனர் என்றும் அமெரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் 12 அணு உலைகள்
விளாடிமீர் புடின் மற்றும் பிரதீபா பட்டீல்
விளாடிமீர் புடின் மற்றும் பிரதீபா பட்டீல்
இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலுமான பங்களிப்பின் முக்கியமான அம்சங்களில் இந்த அணுசக்தி ஒத்துழைப்பும் ஒன்று என அவர் விபரித்துள்ளார்.
ரஷ்யா ஏற்கனவே இரண்டு அணு உலைகளை இந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி்டத்தக்கது.


“இரத்த அழுத்தம் கூடிக்குறையும் தன்மை உள்ளவர்களுக்கே பக்கவாத அபாயம் அதிகம்” – புதிய மருத்துவ ஆய்வு
இரத்த அழுத்தப் பரிசோதனை
இரத்த அழுத்தப் பரிசோதனை
த லான்சட் என்ற பிரிட்டனின் மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வு ஒன்றில், இரத்த அழுத்தம் சீராக இல்லாமல், கூடிக்குறையும் தன்மை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம், தொடர்ச்சியாக உயர்ந்த இரத்த அழுத்த பதிவு உள்ளவர்களை விட அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கவாத அபாயத்தை குறைப்பதற்கு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்றே தற்போதுள்ள மருத்துவ வழிகாட்டிகள் கூறுகின்றன.
ஆனால் புதிய ஆய்வுகள் மூலம் வெளியான முடிவுகள், இரத்த அழுத்தத்தின் கூடிக்குறைகின்ற தன்மையே பக்கவாத அபாயத்தை தீர்மானிப்பதில் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளன.
இரத்த உறைவு அல்லது இரத்தப் போக்கு காரணமாக மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படுதல் போன்றவற்றால் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டு தோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.      

செய்தியரங்கம்
 

ஹில்லாரி கிளிண்டன் அம்மையார்
ஹில்லாரி கிளிண்டன் அம்மையார்
இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலை குறித்து அமெரிக்க அரசு கரிசனை
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் இராஜாங்கத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அந்தத் துறையின் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்களால் வெளியிடப்பட்டது.
பல நாடுகளில் காணப்படுகின்ற மனித உரிமை நிலவரங்கள் குறித்து பரந்ததுபட்ட அளவில் அது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் மனித உரிமைகள் நிலமைகளை பொறுத்தே அந்நாட்டுடன் தமது இராஜாங்க, பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கும் என்று அமெரிக்காவின் இராஜாங்கத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று நியூயார்க்கில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படுகின்ற மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்க போக்கு வீழ்ச்சியடைந்து வந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
மோதல் பகுதிகளுக்கு வெளியே சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்களால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.


இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலரின் முயற்சியை அணி சேரா நாடுகள் இயக்கம் கண்டித்துள்ளது
அணிசேரா நாடுகள் இயக்க மாநாட்டுக் கூட்டம்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. மன்றத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்துள்ள முயற்சியை அணிசேரா நாடுகள் இயக்கம் கண்டித்திருக்கின்றது.
அணிசேரா நாடுகள் இயக்கத்தில் இலங்கை உட்பட 118 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த இயக்கத்தின் ஐ.நா. மன்றத்திற்கான தூதுவராக நியுயோர்க்கில் உள்ள மஜீட் ஏ. அப்டேலஸீஸ் இது குறித்து ஐ.நா. மன்றச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கை தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்கும் முடிவானது, இலங்கையின் உள்நாட்டு நிலைமைகளைக் கவனத்தில் கொள்ளாமலும், இலங்கை அரசாங்கத்தைக் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்பட்டுள்ளது என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நாடொன்றினைத் தண்டிக்கும் வகையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ள ஐ.நா. மன்றத்தின் இந்த முடிவை கண்டிப்பதுடன், அணிசேரா நாடுகள் இயக்கம் மற்றும் ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எதிரானதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


பொன்சேகா விடுதலை கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல்
சரத் பொன்சேகா
இலங்கை அரசாங்கத்தினால் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு இராணுவ தளபதிக்கு கட்டளையிடக் கோரி ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நிதிமன்றம் முன் இம்மனுவை சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா தாக்கல் செய்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உட்பட 8 பேர் பிரதிவாதிகளாக இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனது கணவர் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்களால் பலவந்தமாக கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவரை கடத்தி சென்றது இலங்கையின் சட்டங்களுக்கு முரணானது என்றும் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் இராணுத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவ நீதிமன்றத்தில் அந்த விசாரணைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளது.
போருக்கு பின் அரசியல் தீர்வு, மக்களின் உடனடித் தேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை இந்த அறிக்கை கூறுகிறது.
வடகிழக்கு மீண்டும் ஒன்றிணைந்த மாகாணமாக சமஷ்டி அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்றும், அது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது.
வடகிழக்கு மாகாண இணைப்பை உயர்நீதிமன்றம் செல்லுபடியாகாது என்று தீர்பளித்துவிட்ட நிலையில், மீண்டும் இணைப்பு எப்படி சாத்தியமாகும் என்றக் கேள்ள்விக்கு அக்கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமசந்திரன் அளிக்கும் பதிலை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கடத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு கப்பல் ஊழியருடன் தொலைபேசியில் பேசினார் மனைவி
கடத்தப்பட்டவரின் குடும்பத்தார்
சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடந்த முதலாம் தேதி முதல் கடத்தப்பட்ட சவுதி அரேபிய கப்பலில் பிடித்துவைக்கப்பட்டுள்ள கப்பல் சிப்பந்திகளில் ஒருவரான மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த ரொபர்ட் வீ ஜோசப்பிடம் ஒரு முறை தொலைபேசியில் பேச முடிந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடத்தப்படடுள்ள 13 இலங்கை மாலுமிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.
ஜப்பானிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்துகொண்டிருந்தவேளை சோமாலிய கடற்கொள்ளையர்களினால் இக்கப்பல் பிடிக்கப்பட்டது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை விடுவிப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் கப்பம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதராலயமும் நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகிறது.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்
ஐ.பி.எல். ஏற்பாட்டாளர் லலித் மோடி
இந்திய பிரிமியர் லீக்கின் மூன்றாம் வருட கிரிக்கெட் பந்தயம் மும்பை நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் கிளப்புகள் இடையிலான இந்த பந்தயம் ஒரு பெரும் வரவேற்பைப் பெற்று ஆச்சர்யப்படத்தக்க வெற்றி கண்டுள்ளது.
முதல் ஆட்டத்தில் சென்ற வருடம் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஹைதராபாத்தின் டெக்கன் சார்ஜர்ஸ் அணியும் கொல்கத்ததாவின் நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
பாதுகாப்பு கவலைகள் இந்தப் பந்தயம் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளன என்றாலும், வீரர்களின் அச்சுறுத்தல்கள் இந்தப் பந்தயத்தை பாதிக்கும் நிலையிருந்தது.
இந்தியாவின் பெருநகரத் திரையரங்குகள் பலவற்றிலும், யூடியூப் வீடியோ இணைய தளத்திலும் ஐ.பி.எல். ஆட்டங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.
 

                                  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’