
மீள்குடியேற்றம் அரசியல் தீர்வு மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையைத் தாண்டும் பிரச்சினைகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவ் அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக்குடியமர்த்துதல், புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியம் குறித்தும் தமிழ் இளைஞர்களுக்கு குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான திறன்விருத்தி தொழிற்பயிற்சி செயற்;திட்டங்களுக்குத் தேவையான பயிற்சிகளை இந்தியாவில் வழங்குதல் மற்றும் உள்@ரில் அவ்வாறான நிறுவனங்களை நிறுவி அதற்கான போதனாசிரியர்களையும் இந்தியாவே வழங்கி உதவ வேண்டும் என்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்த ஒரு நிறுவனத்தை வடக்கில் நிறுவுதன் அவசியம் குறித்தும் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழ் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் கடற்பிராந்தியத்திற்குள் இந்தியக் கடற்தொழிலாளர்கள் ஊடுருவுவதால் இலங்கை கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அது பாதிப்பதுடன் தேவையற்ற பகைமை உணர்வுக்கும் அது காரணமாகின்றது என்று உணர்த்தியதுடன் இப்பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இந்திய மத்திய அரசுடனும் தமிழ் நாட்டு மாநில அரசுடனும் தொடர்பு கொண்டு முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விவசாய மற்றும் நீர்வள முகாமைத்துவம் தொடர்பாக நிபுணத்துவ ஆலோசனைக்கு இந்திய விவசாய விஞ்ஞானியான சுவாமிநாதன் அவர்களின் சேவையைப் பெற்றுத் தருமாறும் அதே நேரம் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் முகமாக இந்தியா குறுகிய காலத்தில் அதிக விளைச்சலையும் கூடிய பயனையும் தருகின்ற நாற்றுக்கள் மற்றும் விதைகளை தந்துதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன் யுத்தம் காரணமாக பெரும்பாதிப்புக்குள்ளாயுள்ள பனை வளத்தை அபிவிருத்தி செய்து அதற்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடினார்.
இதே நேரம் அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இப்பொருட்களை நேரடியாக வடபகுதிக்கு அனுப்பி யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலை வாசியை ஸ்திரமாக்குதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு யாழ் விவசாயிகள் உச்ச உற்பத்தி இலக்கை அடையும் வரை இதைத் தொடரலாம் என்று தெளிவுபடுத்தியதுடன் தற்பொழுது இப்பொருட்கள் கொழும்பு ஊடாகப் பெறப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து செலவானது விலை அதிகரிப்புக்கு காரணமாகிறது எனறும் எனவே மேற்படி நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் வட இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமிடையிலான வர்த்தக உறவுகள் மேம்படும் என்றும் தெரிவித்தார்.
13வது சீர்திருத்தத்தின் அமுலாக்கலில் தொடங்கி அதை மேம்படுத்தி நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி நகர்வதன் மூலம் எமக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடைய முடியும் என விளக்கிக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதற்கு இந்தியாவின் அனுசரனையும் வழிகாட்டலும் அத்தியாவசியமாகும் எனத் தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’