
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க மற்றும் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலை எதிர்வரும் பன்னிரண்டாம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது சந்திப்பாகும். இதன்போது நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான நேர ஒதுக்கீடு குறித்து கடைபிடிக்க வேண்டிய முறைமை தொடர்பாக ஆராயப்படவுள்ளது. அதேவேளை, வாக்குகளை புதிய முறையில் எண்ணுவது தொடர்பிலும் கட்சி காரியாலங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் புதிய முறைமையொன்றினை அமுல்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் தேர்தலில் மாவட்ட ரீதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் இந்த முறை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரிய அளவில் நிதியினை சேமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’