
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் நாளை திங்கள் கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மகளிர் நலத் திட்டங்களில் முன்னோடி திமுக- கருணாநிதி
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை..
டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் 1910ம் ஆண்டில் நடைபெற்ற உலகளாவிய பெண்கள் மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி,
பெண்களுக்கு வேலை செய்யும் உரிமை, வாக்குரிமை, பயிற்சி பெறும் உரிமை, பொது அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை, பாலின வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1911ம் ஆண்டில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உலக மகளிர் தினம் முதல் முதலாகக் கடைபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் நாள் கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் இந்த ஆண்டில் 100வது மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் பெண்கள், கல்வி வாயிலாக வேலை வாய்ப்புகள் பெற்று பொருளாதாரத் தன்னிறைவு காண்பதன் மூலமே,
நாட்டில் உண்மையான சமதர்ம, சமத்துவ சமுதாயம் மலரும் என்ற அடிப்படையில் திமுக அரசு பல்வேறு மகளிர் முன்னேற்ற திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது.
1973ல் காவல் துறையில் மகளிர் நியமனம், 1989ல் மகளிர் மேம்பாட்டுத்திட்டம், ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப்பட்டப்படிப்புத் திட்டம், 2007ல் இத் திட்டம் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு, 1990ல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30% இட ஒதுக்கீடு,
பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்திடும் தனிச் சட்டம், 1996ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, 2006ல் மாதர் அறிவு வளம் பெற இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்,
நகர்ப்புற சுய உதவிக்குழுக்களுக்கும் சுழல் நிதி, 2007ல் எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள், மூவலூர் மூதாட்டியார் திட்டம் உள்பட ஏழைப் பெண்களுக்கான பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்கள்.
ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி, 50 வயது கடந்தும் திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் வீதம் உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகிறது.
நூறாவது ஆண்டு உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில் தமிழக மகளிர் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்' என்று கூறியுள்ளார்.
பெண்ணடிமை தீரட்டும், பெண்ணுரிமை வாழட்டும் - ஜெ.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மகளிர் தினம் என்பது பெண் விடுதலையின் முதல் படி என்று சொன்னால் அது மிகையாகாது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும் பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும் பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் மகளிர் தினம்.
‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்னும் நிலை மாறி ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினால் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!’ என்று சொல்லும் அளவிற்கு இருபதாம் நூற்றாண்டில் மகளிர் முன்னேற்றம் தொடங்கியது.
‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ்வையம் தழைக்குமாம்'
என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க மகளிர் முன்னேற்றம் மலரட்டும். பெண்ணடிமை தீரட்டும். பெண்ணுரிமை வாழட்டும் என்று வாழ்த்தி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
நிஜமான சமநிலை உருவாக வேண்டும் - விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துச் செய்தியில், 'ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பது ஏட்டில் தான் உள்ளது. 1941ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 1047 பெண்கள் என்ற விகிதம் இருந்தது.
2001ம் ஆண்டில் அது 921ஆக குறைந்துவிட்டது. கருவிலேயே கண்டுபிடித்து பெண் கருக்களை கலைப்பதும், குழந்தை பிறந்த உடன் பெண் குழந்தைகளைக் கொல்லுவதுமே இதற்குக் காரணம்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பெருகி வருகின்றன. உதாரணமாக ஈவ்டீசிங், கடத்தி கற்பழித்து கொலை செய்வது, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள் இழைக்கப்படுவது உடனடியாக கண்டுபிடித்து அரசு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.
உலக மகளிர் தினத்தன்று அனைத்து தரப்பினரும் மகளிருக்கான மேம்பாட்டை உருவாக்க பாடுபட வேண்டுமென்றும், உண்மை யிலேயே ஆண்களுக்கு, பெண்கள் சமம் என்ற நிலை நாட்டிலே ஏற்பட வேண்டுமென்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்றார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், 'ஆணுக்குப் பெண் இளைத்தவரல்ல என்று நிரூபிக்கும் வகையில்அனைத்துத் துறையிலும் பெண்கள் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர்.
ஆயினும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், குற்றங்களும் நீக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மேலும் முழு சுதந்திரம் கிடைத்திட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
சுயதொழில் மற்றும் தொழில் முனையும் பெண்களுக்கு மேலும் பொருளாதார ரீதியான சலுகைகள் கூடுதலாக கிடைக்கச் செய்ய வேண்டும்.
நீண்ட நாளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நாளை எந்தவித எதிர்ப்பும் இன்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறுமேயானால் அதுவே இந்த ஆண்டு உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய மகளிருக்கு அளிக்கப்படும் சிறந்த பரிசாகும் எனக் கூறியுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’