
சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி.சூளுரைத்தது.
ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர்.
ஜே.வி.பி. தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொணட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை ஆரம்பமாகி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கறுப்பு கொடிகளை ஏந்தியும், அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு மருதானை, டீன்ஸ் வீதியூடாக லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தது.
ஊர்வலத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், ஜனாதிபதி கதிரை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், சுற்றுவட்டம் மற்றும் ஊர்வலம் பயணித்த வீதிகளில் முக்கிய இடங்களில் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
எதிர்ப்பு ஊர்வலம் லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தவுடன் அங்கு தற்காலிகமாக மேடையொன்று அமைக்கப்பட்டு எதிர்ப்பு கூட்ட·ம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் விடுதலை ·ன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் காந்த, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உரையாற்றினர்.
முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார், அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது.
ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும்.
தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம் என்றார்.
முன்னாள் எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றுகையில்,
தனிப்பட்ட குரோதங்களுக்காகவோ,ஜனநாயகத்திற்கு எதிராகவோ செயற்பட்டமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மக்களின் ஆணையை கோரியமைக்காகவே அவரை கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.
58 வீதமான மக்கள் வாக்களித்தார்களாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன்?அச்சம் கொள்ளவேண்டும், மக்கள் ஆணையை களவெடுத்தவர் ஜனாதிபதி கதிரையில் இருக்கமுடியாது. ஜனாதிபதி பெறுபேறுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளோம். வாக்குகளை மீள எண்ணவேண்டும். இல்லையேல் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க உரையாற்றுகையில்,
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இங்கு மட்டுமல்லாது முழு உலகிலும் நடத்தப்படுகின்றது.
எங்களுக்கு கணனி அறிவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர் செய்த கணனி விளையாட்டு உண்மை இல்லை என்பதனை மகாபோதியின் முன்னிலையில் சத்தியம் செய்ய முடியுமா? அவ்வாறு பொய்யாக சத்தியம் செய்தால் அவரது இதயம் நூறுதுண்டுகளாக சிதறும்.பொய்யென்றால் எனது இதயம் ஆயிரம் துண்டுகளாக சிதறும்.
ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் மகாநாயக்க தேரர்களும் இந்த விடயத்தில் தலையிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஜெனரலை விடுதலை செய்வதற்குமான மக்கள் போராட்டம் அவரை விடுவிக்கும் வரையில் தொடரும் என்றார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’