வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


கராச்சியைக் காட்டும் வரைபடம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முன்னணித் தலைவர் 'பிடிபட்டார்'

தாலிபான்களின் மூத்த இராணுவத் தளபதியும் முன்னணி வியூக வகுப்பாளருமான முல்லா அப்துல் கனி பராதார் இந்த மாத முற்பகுதியில் கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தி முதலில் வாஷிங்டனில் இருந்து வந்தது. பின்னர் அதனை பாகிஸ்தானிய அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பிபிசியிடம் உறுதி செய்தனர்.

ஆனால், இதுவரை பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஆனால், ஆப்கானிய தாலிபான்களின் பேச்சாளர் ஒருவர் இதனை மறுத்துள்ளார்.

அமெரிக்கர்கள் தமது தோல்வியில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.


ஆப்கானில் நேட்டோ படை நடவடிக்கையில் 'முன்னேற்றம்'

நேட்டோவின் மரைன்ஸ் படையினர்

ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திவரும் மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை நான்காவது நாளை எட்டியிருக்கிறது.

அந்த பிரதேசத்தில் தாலிபான் அமைப்பு வலுவாக இருக்கும் மார்ஜா பகுதியில் அமெரிக்கப்படைகள் ஆயுத பலம்வாய்ந்த எதிர்ப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சந்தித்துவருகின்றனர்.

தற்போதைய தங்களின் தாக்குதல்கள் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களுக்கு ஒரு முன்னோடியாக திகழக்கூடுமென காந்தஹாரில் இருக்கும் பிரிட்டிஷ் ராணுவ தளபதி நிக் பார்க்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுபோன்ற பெரும் தாக்குதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே குறிப்புணர்த்துவது பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க உதவுவதாக அவர் கூறினார். அதேசமயம் தற்போதைய தாக்குதல் நடவடிக்கை களில் குறைந்தது பதினேழு ஆப்கானியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.


அயர்லாந்து திருச்சபையில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதை பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளார்

அயர்லாந்து ஆயர்களைச் சந்திக்கும் பாப்பரசர்
ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அயர்லாந்தின் திருச்சபைக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது என்று பாப்பரசர் பெனடிக்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.

திருச்சபையின் ஒழுக்கக் கல்வி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தலைமையின் மீதான நம்பிக்கை உடைந்துபோயிருக்கிறது என்றும், வத்திக்கானில், அயர்லாநந்து ஆயர்களிடம் பேசுகையில் பாப்பரசர் கூறினார்.

ஒரு கொடிய குற்றச்செயல் என்றும் மிகப் பெரிய பாவம் என்றும் இந்த துஷ்பிரயோகங்களை விபரித்துள்ள பாப்பரசர், இதனால் திருச்சபை அடைந்துள்ள வேதனையை இலகுவில் ஆற்றிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அயர்லாந்து அதிகாரிகளுக்கு உதவ திருச்சபை தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துஷ்பிரயோகங்களை அயர்லாந்தில் உள்ள திருச்சபை தலைவர்கள் மறைக்க முயன்றதாக அண்மைய அறிக்கை ஒன்று கூறுகிறது.


அமெரிக்காவே 'சர்வாதிகாரி': இரான் பதிலடி

இரான் அதிபர்
தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.

இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.

தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.


பர்மீய இனச் சிறுபான்மையினர் மீது கூடுதல் ஒடுக்குமுறை: அம்னெஸ்டி அமைப்பு எச்சரிக்கை

மலேசியாவில் அகதியாக ஒடுக்குமுறைக்கு ஆளான பர்மாவின் சின் இனப் பெண்
பர்மாவில், இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கும் தேர்தல் காரணமாக, அந்நாட்டில் வாழும் இனச் சிறுபான்மையினர், பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து கடும் அழுத்தங்களை சந்திக்க நேரலாம் என்று, மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்கிற அனைத்துலக பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.

பர்மாவின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அங்கே கைது செய்யப்படலாம், சிறையிலிடப்படலாம், சித்திரவைதைக்கு உள்ளாக்கப்படலாம், சில சமயங்களில் மரணிக்கலாம் என்று அதன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்மாவின் மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவீம் பேராக இருக்கும் இனச் சிறுபான்மையினர், பர்மாவின் எதிர்க்கட்சிகளின் அரசியலில் முக்கிய பங்காற்றக்கூடும் என்று அந்த அமைப்பின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சர்வதேச சமூகனானது நோபெல் பரிசு பெற்ற ஆங்சான் சூசி மற்றும் அவரது ஜனநாயகத்துக்கான தேசிய கூட்டணி மற்றும் ஆயுத குழுக்கள் மீது அதிகமான கவனம் செலுத்திவருவதாக அம்னெஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவால் இலங்கை ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவால் இலங்கை ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் ஏற்றுமதி வரிச் சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் எனப்படும் இறக்குமதி தீர்வை சலுகையை ஆறு மாதங்கள் கழித்து தற்காலிகமாக நிறுத்துவது என்பதாக முடிவுசெய்துள்ளது.

நல்ல ஆளுகை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் சலுகை இந்த ஜி.எஸ்.பி பிளஸ் ஆகும்.

மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட ஐ.நா.வின் மூன்று உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காண்பித்த பெரிய குறைபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சலுகை நிறுத்தத்தினால், இலங்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று இலங்கையின் ஏற்றுமதித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு டிசம்பரில், ஐரோப்பிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சலுகை இடைநிறுத்தத்ததுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக சலுகை நிறுத்தம் இன்னும் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.


மேற்கு வங்க மாவோயிஸ்ட் தாக்குதலில் பொலிசார் 24 பேர் பலி

யுத்தப் பயிற்சியில் மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் (பழைய படம்)
மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 24 போலீசார் கொல்லப்பட்டார்கள். தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 100 மைல் தென்மேற்கே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள சில்டா என்ற பகுதியில் போலீசார் அமைத்திருந்த முகாம் மீது நேற்று மாலை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கார், ஜீப் மற்றும் மோட்டார் சைச்கிள்களில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்திய அவர்கள், கையெறி குண்டுகளையும் முகாம் மீது விசியுள்ளனர்.

மேலும், முகாமுக்குச் செல்லும் வழியில் புதைத்து வைத்திருந்த நிலக்கன்னிவெடிகளையும் அவர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

கையெறி குண்டுகள் வீசப்பட்டதில், முகாமின் பெரும்பகுதி எரிந்து நாசாமாவிட்டது. அப்போது அந்த முகாமில் 51 ஜவான்கள் இருந்தனர். 24 ஜவான்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போலீசார், மேலும் பலரைக் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்பட பெருமளவிலான ஆயுதங்களையும் அந்த முகாமிலிருந்து மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை சமீபகாலமாக இந்திய அரசு முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், மாவோயிஸ்டுகள் நடத்திய இந்தத் தாக்குதல் அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.


ஜனாதிபதித் தேர்தல் முடிவை ரத்து செய்யக்கோரி பொன்சேகா நீதிமன்றத்தில் மனு

சரத் பொன்சேகா
இலங்கையில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகா சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையிலும் தேர்தல் முடிவுகளிலும் கணினியை உபயோகித்து மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் குறித்த உத்தியோகபூர்வ பிரகடனத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கி பலவந்தமான முறையில் தனக்கு சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மோசடியான வழியில் பெற்றிருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த அனுமதியின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் கையொப்பத்தைப் பெற்று அவரது பெயரிலேயே மனுவும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே ஜனாதிபதிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒரு மாதகாலமாக இரகசிய பொலிசாரின் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நுகேகொட நீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


தேசிய உயர் கல்வி ஆணைய திட்டத்துக்குக் தமிழகம் எதிர்ப்பு

அமைச்சர் பொன்முடி
அகில இந்திய அளவில் உயர் கல்விக் கொள்கைகளை உருவாக்கவும் அமல்படுத்தவுமென தேசிய உயர் கல்வி ஆணையம் உருவாக்குவது என்ற மத்திய அரசின் யோசனையினை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

புதியதொரு ஆணையத்தை உருவாக்குவது பற்றி மாநிலங்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டுவருகிறது. இது குறித்து புதன்கிழமையன்று சென்னையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் அழைத்து அமைச்சர் பொன்முடி பிரேரிக்கப்பட்டுள்ள ஆணையம் பற்றி விரிவாக விவாதித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எவ்வாறு புதிய ஆணையம் மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதாக அமையும் என்றும் விளக்கினார்.

கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகுதான் உயர்கல்வி நிறுவனங்கள் வணிகமயமாகி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகள் தலையெடுத்தன என்று மேலும் கூறிய பொன்முடி, ஆணையம் குறித்து இறுதிமுடிவை எடுக்கும் முன், மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.


வவுனியாவில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தனி பாடசாலை

தனி பாடசாலையில் படிக்கப்போகும் இடம்பெயர்ந்த சிறார்கள்

இலங்கையின் வடக்கே வவுனியாவில், உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்களுக்குத் தனியான பாடசாலைகளில் கல்வியூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திலும், நெலுக்குளம் மகாவித்தியாலயத்திலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் மாத்திரம் 2600 மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த மாணவர்கள் ஏற்கனவே வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று வந்த போதிலும் இடநெருக்கடி உட்பட பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இவர்களுக்குத் தனியான பாடசாலைகளை வவுனியாவில் அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’