நைஜீரிய அதிபர் உமர் யார் அடுவா |
நைஜீரிய ஜனாதிபதியாக ஜொனதனே தொடர்வார்
நைஜீரியாவின் ஜனாதிபதி உமர் யார் அடுவா சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பிய நிலையிலும் அந்த நாட்டின் துணை அதிபர் குட்லக் ஜோனாதன் தொடர்ந்து நாட்டை வழி நடத்திச் செல்லுவார் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
யார் அடுவாவின் உடல் நிலை மிகவும் மேம்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதியின் பேச்சாளர், ஐனாதிபதிக்கு சிகிச்சைக்கு பின்னான ஒய்வு தொடர்ந்து தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இருதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஜீட்டாவில் உள்ள மருத்துவமனையில் மூன்றுமாத காலம் சிகிச்சை பெற்ற பிறகு இன்று அதிகாலை விமானம் மூலம் ஜனாதிபதி தலைநகர் அபூஜா திரும்பினார்.
யார் அடுவா அவர்களுக்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை என்று அபூஜாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
கிரேக்கத்தில் இருபது லட்சம் பேர் வேலை நிறுத்தம்
தேசிய மட்ட வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் |
இதனால் வான், கடல்வழி மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தினர்.
கிரேக்க அரசின் பொருளாதார சிக்கன திட்டத்தின் கீழ் ஊதியங்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்படும், அதே நேரம் வரிகள் அதிகமாகும். இதன் காரணமாக நாட்டில் உள்ள மிகவும் வறியவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
துருக்கிய இராணுவ அதிகாரிகள் மீது சதி வழக்கு
குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு அதிகாரி நீதிமன்றத்துக்கு வருகிறார் |
ஒரு சிவிலியன் நீதிமன்றத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை இவ்வளவு அதிக மூத்த இராணுவ அதிகாரிகள் எதிர்கொள்வது இதுவே முதல் முறை.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த சதி குறித்து, முன்னாள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உட்பட மேலும் பல மூத்த அதிகாரிகள், விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
துருக்கியின் இராணுவம், நாட்டின் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தின் பாதுகாவலனாக பாரம்பரியமாகப் பார்க்கப்பட்டுவருகிறது.
இஸ்லாமிய வேர்களைக் கொண்ட அரசாங்கத்துடன் அதன் உறவுகள் அடிக்கடி பதற்றமானதாகவே இருந்து வந்திருக்கின்றன.
குழந்தை குடி அகல்வோர் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார்
பிரிட்டிஷ் பிரதமர் |
40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த, குழந்தை குடி அகல்வோர் திட்டம் என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில், ஏழைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு மேலும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதிமொழியில் அனுப்பப்பட்டனர். ஆனால், இவ்வாறு அனுப்பப்பட்ட குழந்தைகளில் பலர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளானார்கள்.
இந்தச் சம்பவம் மிகவும் அவமானகரமான விஷயம் என்று வர்ணித்த பிரவுன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறார்களது குழந்தைப்பருவம் அபகரிக்கப்பட்டது என்றார்.
இதே போன்ற ஒரு மன்னிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அவர்களும் நவம்பர் மாதத்தில் கோரினார்.
உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் |
உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் டேவிட் மிலிபாண்ட்: இலங்கை அரசாங்கம் கண்டனம்
பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து செயற்பட்டு வருகின்ற இந்த உலகத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை, விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவு அமைப்பாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசாங்கம் அதில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கலந்துகொள்வது இலங்கையின் இறைமையை குறைத்து மதிப்பிடும் செயலாக அமையும் என்று கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான பதில் பிரிட்டிஷ் தூதுவர் மார்க் கூடிங் அவர்களை அழைத்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலும் மேற்கு நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புக்களை ஒரு குடையின் கீழ் இணைத்து செயற்படும் அமைப்பாக உலக தமிழர் பேரவையை விபரித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளில் அந்த அமைப்பு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு நகர்வு என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
ஆகவே இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அங்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவத்ற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால், உலக தமிழர் பேரவையின் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், இன்று காலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அரசியல் தீர்வு
அங்கு உரையாற்றிய அவர், இலங்கை பிரச்சினைக்கு ஒரு அமைதியான, அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அந்த தீர்வு எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து இலங்கை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலம் ஒரு இறுதியான தீர்வை இலங்கை அடைய வேண்டும் என்பதே பிரிட்டனின் அவா என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த இலக்குக்காக செயற்படுகின்ற இலங்கையின் அனைத்து மக்களுடனும்- அவர்கள் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டன் சேர்ந்து செயற்படும் என்றும் மிலிபாண்ட் அவர்கள் உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் பேசியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்ப்பட வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் எஞ்சியுள்ள மக்கள் மீள் குடியேற்றப்படுவதுடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் விடுததலை செய்யப்பட்டு, மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
வடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல்
வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த த.தே.கூவினர் |
அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.
அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை; இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த செல்வராஜா |
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி தாக்கல் செய்துள்ள வேட்பாளர் பட்டியலில் 1994 மதல் 2002 வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தலைமை வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அக் கட்சி சார்பில் அங்கம் வகித்திருந்த 4 பேரில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, ரி.கனகசபை ஆகியோர் இத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கோரவில்லை என கூறப்படும் நிலையில், வேட்பு மனு கோரி விண்ணப்பித்திருந்த ஏனைய இருவரில் பா.அரியநேத்திரனுக்கு மாத்திரமே அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இடமளிக்கப்படாத மற்றுமொருவரான தங்கேஸ்வரி கதிர்காமர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணைந்து போட்டியிடுகிறார்.
1988 இல் ஈரோஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செளந்தராஜானுக்கும் அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை இது வரை இரண்டு அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம்பெற்றுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு விஜயராஜா சத்தியசீலன் தலைமையில் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இம் மாவட்டத்தில் இதுவரை 5 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’