வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

மதுரையிலும் இரண்டு பேர் சுட்டுக் கொலை : போலீஸ் அதிரடியால் ரவுடிகள் கலக்கம்


மதுரை : மதுரை செக்-போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., மற்றும் ஏட்டை தாக்கி, பைக்கில் தப்ப முயன்ற, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள் கவியரசு,முருகன் ஆகியோரை, உதவி கமிஷனர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் அதிரடியால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த 8ம் தேதி கூட்டாளியுடன் திண்டுக்கல் பாண்டி, "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று இவர்கள் கொல்லப்பட்டனர். மதுரையில் சமீபத்தில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., தென்னரசு (கீரைத்துறை குற்றப்பிரிவு), ஏட்டு கணேசன் (தெற்குவாசல் குற்றப்பிரிவு) ஆகியோர் நேற்று பகல் 12.15 மணிக்கு தெப்பக்குளம் செக்-போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு டவுன் உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை மற்றும் போலீசாரும் இருந்தனர்.
என்கவுண்டர்: சிலைமானில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை, எஸ்.ஐ., தென்னரசு, ஏட்டு கணேசன் மறித்தனர். அவர்கள் பைக்கை நிறுத்துவது போல் போக்குக்காட்டி, எஸ்.ஐ., மற்றும் ஏட்டை கத்தியால் குத்தி விட்டு, தப்ப முயன்றனர். எஸ்.ஐ., மற்றும் ஏட்டு அலறல் சத்தம் கேட்டு, உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். பைக்கில் தப்ப முயன்ற இருவரையும் உதவி கமிஷனர், துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த இருவரையும், "108' ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இருவரும் இறந்தனர். காயமடைந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டை மற்றொரு ஆம்புலன்சில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டிஸ்மிஸ் ஏட்டு மகன்: சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் "டிஸ்மிஸ்' ஏட்டு மச்சக்காளை மகன் கவியரசு (32). இவரது நண்பர், மதுரை நரிமேட்டை சேர்ந்த ஆறுமுகம் சேர்வை மகன் முருகன் (எ) கல் மண்டையன் (35). இவர்கள் மீது தென்மாவட்ட அளவில் வழிப்பறி, கற்பழிப்பு, வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை குத்திவிட்டு, பைக்கில் தப்ப முயன்றபோது, அவர்களை உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்து உள்ளனர். அவர்கள் பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா (டி.என்., 64 7733) பைக்கும் திருடப்பட்டது தான். இது தொடர்பாக தெப்பக் குளத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

வெள்ளைதுரை பேட்டி: என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆர்.டி.ஓ., சுகுமார் விசாரணை மேற்கொண்டார். அவரிடம், உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை கூறியதாவது: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., தென்னரசு, ஏட்டு கணேசன் ஆகியோரை, திருடர்கள் இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தியால் குத்தினர். இதை பார்த்து பதறினேன். என் கண்முன்னே இரண்டு போலீசார் பலியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், கைத்துப்பாக்கியால் இருவரையும் இரண்டு ரவுண்டு சுட்டேன். அவர்கள் உடலில் காயங்கள் எங்கெங்கு ஏற்பட்டன என தெரியவில்லை. உயிருடன் இருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினேன். இவ்வாறு வெள்ளைதுரை கூறினார்.

"சந்தன வீரப்பன் புகழ்' வெள்ளைதுரை: கவியரசு, திருட்டு வழக்குகளில் ஏற்கனவே கைதான போது, அவரது தந்தை ஏட்டு மச்சக்காளை பலமுறை காப்பாற்றினார். திருட்டு வழக்கில் தலையிட வேண்டாம் என, மச்சக்காளையிடம் போலீஸ் அதிகாரிகள் கூறியும் கேட்கவில்லை. இதனால், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். முருகனும், கவியரசும் இணை பிரியாத நண்பர்கள். இருவரும் சேர்ந்து தான் வழிப்பறியில் ஈடுபடுவர். சந்தன வீரப்பன் என்கவுன்டருக்கு பின், இரட்டை பதவி உயர்வில் திண்டுக்கல் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் வெள்ளைதுரை. போலீசாருக்கு பலநாட்கள் போக்குகாட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி "செஞ்சுரி' போட்ட கவியரசுவும், முருகனும் தற்போது மதுரையில் உதவி கமிஷனராக உள்ள வெள்ளைதுரையின் தோட்டாக்களுக்கு இரையாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’