
எமது மக்களின் உரிமை பிரச்சினைகளைத் தமது சுயலாபங்களுக்காக மட்டும் அடிக்கடி உச்சரித்துக் கொண்டு தமிழ் மக்களினதும் இளைஞர் யுவதிகளினதும் இரத்தத்தை சூடேற்றி அவர்களது வாக்குகளை மட்டும் அபகரித்துக் கொண்டு எமது மக்களின் மீது அழிவுகளை சுமத்தி அவர்களை அவலங்களுக்குள் சிறைப்படுத்திவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போய் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் சுயலாப அரசியல் தலைமைகள் எந்த முகத்தோடு இனியும் மக்களிடம் ஆணை கேட்டு வரப்போகிறார்கள்.
கடந்து போன பல்வேறு காலச் சூழல்களின் போது தமக்கு வாக்களித்து மக்கள் ஆணையை வழங்கினால் தாம் மக்களது உரிமைகளை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த சுயலாப அரசியல் தலைமைகள் எவையும் வாக்குறுதி கொடுத்தபடி எமது மக்களுக்கான உரிமைகளுக்காக பேரம் பேசும் அரசியலுக்காக பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் இவ்வாறு தங்களது பதவி நாற்காலிகளில் இவர்கள் உல்லாசமாக உட்கார்ந்து கொண்டு வெறுமனே ஊடகங்களுக்கான அறிக்கைகளை மட்டும் வீராவேசங்களோடு விடுத்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எமது மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்வுகளையும், அழிவுகளையும் பேரவலங்களையும் மட்டுமே சந்தித்திருந்தனர்.
77 இல் தனிநாடு கேட்டு மக்கள் ஆணையை பெற்றவர்கள் எமது மக்களை அழியவிட்டு தமிழ்நாட்டில் பெற்றுக் கொண்டது தனிவீடு ஆனாலும் எமது மக்களுக்குக் கிடைத்திருந்தது சுடுகாடு என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில், அன்றைய காலச் சூழலில் தாம் ஆயுதம் ஏந்திய நீதியான போராட்டத்தை நடாத்தியிருந்தபோது தனிநாடு கேட்ட அவர்களே அந்த ஆயுதப் போட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்ததோடு எமக்கு கிடைத்திருந்த பொன்னான வாய்ப்பான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முறைகேடாகவும் மக்களுக்கு விரோதமாகவும் நடத்தியிருந்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து இன்று மக்களின் உரிமை குறித்து பேசுவது வெறும் சந்தர்ப்பவாத அரசியலாகும்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தவறான வழிமுறையிலாயினும் பெற்றுக் கொண்ட 22 பாராளுமன்ற உறுப்புரிமையினை ஒரு முடியாத தமிழ் ஆணையாக வைத்து தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத தமிழத் தேசிய கூட்டமைப்பினர் மாறாக தாம் பெற்ற பாராளுமன்றப் பலத்தை அழிவு யுத்தத்தைத் தூண்டி விடுவதற்கும் அதற்கு நியாயம் கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தியிருந்தவர்கள் என்றும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை எடுப்பது என்பது இதுவரை கால அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் மட்டும் தமது பாராளுமன்ற பலத்தை துஷ்பிரயோகம் செய்திருந்த சுயலாப அரசியல் தலைமைகளை முற்றாக நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் எமது மக்களின் அரசியலுரிமைக்காக உழைத்துவரும் சக்திகளை ஆதரிப்பதாகும்.
ஊடகச் செயலாளர்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’