வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 பிப்ரவரி, 2010

கணினி மோசடி குறித்து ஆட்சேபனை மனுவில் ஏன் தெரிவிக்கவில்லை? : லக்ஷ்மன் யாப்பா


கணினி மோசடி மூலம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதாக குற்றம் சுமத்திவந்த எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து தாக்கல் செய்துள்ள மனுவில் ஏன் இந்த கணினி விடயத்தைக் குறிப்பிடவில்லை? எமது கேள்விக்கு பதிலளிக்குமாறு கோருகின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

"தேர்தல் நடைபெற்ற தினத்தன்று மாலை நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாகவும் அதற்காக அரச ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் தேர்தல் முடிவுகள் வெளியானதுடன் கணினி மோசடி மூலம் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக எதிரணியினர் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் தற்போது எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆட்சேபிக்கும் மனுவில் ஏன் இந்தக் கணினி மோசடி என்ற விடயத்தைக் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றோம். குறித்த மனுவில் அரச சொத்துக்கள் மற்றும் ஊடகங்கள் பயன்படுத்தப்பட்ட விதங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எமது கேள்விக்குப் பதிலளிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அதாவது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பின்னணி ஒன்றை உருவாக்குவதற்கே இவ்வாறு பொய்யான விடயங்களை முன்வைத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலின்போது பேசுவதற்கு ஒரு விடயத்தை வைத்துக்கொண்டுள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இதனைவிட பாரிய தோல்வியை சந்திப்பதற்கு தயாராகுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். குறை கூறுவதனைவிடுத்து முதலில் தங்கள் அரசியல் பயணத்தை மாற்றுமாறு எதிரணிக்கு கூறுகின்றோம்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதியான தேர்தல் நடைபெற்றது என்பதற்கு இதனைவிட ஒரு சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் கருதுகின்றோம். ஜனாதிபதி 18 லட்சம் மேலதிக வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது ஊடகத்துறையில் மாற்றங்களை செய்துள்ளமை போன்று நாட்டின் பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எனவே அதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுத்தருமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 150 ஆசனங்களை பெற்றுத்தாருங்கள். நாங்கள் எதிர்காலத்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கு செல்லவேண்டியுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது மருமகன் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே அவை தற்போது நீதிமன்றம் முன்பாக உள்ள விடயங்கள். அவை தொடர்பில் நாங்கள் தலையிட முடியாது. சரத் பொன்சேகா குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் விடுதலையாவார். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமிடத்து அவர் தண்டனை பெறுவார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சகல வசதிளுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய கடற்படை தளபதி, கடற்படையின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தபோது தங்கியிருந்த 4 அறைகள் கொண்ட இல்லத்தில் சகல வசதிகளுடனும் சரத் பொன்சேகா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. எனினும் அவருக்குரி“ய கௌரவம் அளிக்கப்பட்டுவருகின்றது. இராணுவ சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தாலும் முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுகின்றது.

இது எவ்வகையிலும் அரசியல் பழிவாங்கல் அல்ல. அரசியல் ரீதியில் செய்யவேண்டும் என்றால் தேர்தல் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். மேலும் அவரின் ஓய்வூதிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்காமல் இருந்திருந்தால் சரத் பொன்சேகாவினால் வேட்பு மனு தாக்கல்கூட செய்ய முடியாமல் போயிருக்கும்.

அவர் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக இருந்தமையினால் அவரை இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என்று எதிரணியினர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கைது செய்ய முடியும். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுபோது இராணுவ உறுப்பினராகவே இடம்பெறுவார். அதனைத்தான் 2009 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் கூறுகின்றது.

கேள்வி: தேரர்கள் நடத்தவிருந்த விசேட பௌத்த மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து?

பதில்: நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது பௌத்த பீட தேரர்களின் தன்மை. அது அவர்களின் பொறுப்பு என்றும் கூறலாம். எனினும் இந்த விடயம் தற்போது அரசியல்மயப்படுத்தப்படுகின்றது என்பது தேரர்களுக்கு தெரிந்துகொண்டுள்ளது. அவர்கள் அந்த விடயம் தொடர்பில் புரிந்துகொண்டமையினால் குறித்த மாநாட்டை ஒத்தி வைத்துள்ளனர்.

கடந்தவாரம் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியிருந்தார். அது எதிர்க்கட்சி தலைவரின் கடமை.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அதனை விரும்பவில்லை. அவர்கள் சரத் பொன்கேசா உள்ளே இருப்பதையே விரும்புகின்றனர். அதனை வைத்து அரசியல் செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது. சரத் பொன்சேகா சார்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவர் விரைவில் விடுதலையாவார் என்றால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

கேள்வி: ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளமையினால் அமைச்சின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுமா?

பதில் : அவ்வாறு ஒன்றும் இல்லை.

கேள்வி: அமைச்சரவை பேச்சாளர் யார் ? நீங்களா?

பதில்: அதனை ஜனாதிபதி அறிவிப்பார். அல்லது பொறுப்பை கையளிப்பார்.

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் ஒட்டுமொத்தமாக நீதியாக நடைபெறவில்லை என்று பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளதே?

பதில்: எனினும் நீதியான தேர்தல் நடைபெற்றுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளதே?

கேள்வி: பி.டி.ஐ. பக்ரீயா எப்போது இலங்கைக்கு கொண்டுவரப்படும்?

பதில்: அது தொடர்பில் எனக்குத் தெரியாது. அதனை நீங்கள் சுகாதார அமைச்சரிடம்தான் கேட்கவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’