எமது பாடசாலையினது மட்டுமன்றி யாழ் குடாநாட்டின் அனைத்துப் பாடசாலைகளினதும் மேம்பாட்டிற்காகக் கடுமையாக உழைத்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் அதே போன்று எமது குடாநாட்டின் சகல துறைகள் சார்ந்த அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகளையும் அவர் மட்டுமே உயரிய பட்சத்தில் மேற்கொண்டு வருகின்றார் என்றும் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் (24) மாலை மேற்படி பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டி முடிவின் போது நிகழ்ந்த பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி விழாவில் பிரதம அதிதியாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த வித்தியாலய அதிபர் அவர்கள் எமது பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விருதுகளைப் பெறவும் தேசிய மட்டத்தில் விருதுகளைப் பெறவும் மிக முக்கியப் பங்களிப்புக்களை வழங்கி வந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அம்மாணவர்களுக்கான போக்குவரத்து உட்பட அனைத்து செலவுகளையும் தானே ஏற்றிருந்தார் என்றும் அதுமட்டுமன்றி எதுவிதமான அபிவிருத்திகளும் காணப்படாதிருந்த எமது பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளை ஏற்படுத்தியவரும் அவரே என்றும் எமது பகுதிகள் இந்தளவிற்கு முன்னேற அரிய பல பணிகளை அவர் ஆற்றி வருகின்றார் என்றும் தெரிவித்தார்.
யாழ் மத்திய கல்லூரி பெரிதும் பாதிப்படைந்திருந்த நிலையில் அதன் அதிபர் காலஞ் சென்ற ராசதுரை அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தொடர்பு கொண்டதற்கிணங்க அமைச்சர் அவர்கள் தனது உச்ச பங்களிப்புக்களை வழங்கி அக்கல்லூரியை நல்லதொரு நிலைக்கு முன்னேற்றியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விழாவில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி பாடசாலைக்கான வீதியை தான் வெகுவிரைவில் திருத்தியமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதே நேரம் பாடசாலையின் பாதிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை திருத்தியமைப்பதற்கு இந்த ஆண்டில் ஒதுக்கப்படும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து நிதி வழங்க ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’