சிலி சுனாமி – வரைபடம் |
சிலி நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
சிலியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருவதாக சிலி அரசு கூறியுள்ளது.
சிலி கடற்கரையில் இருந்து சற்று தூரத்தில் ரிக்டரில் 8.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் 300 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிர்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன. இதில் ஒரு அதிர்வு ரிக்டரில் கிட்டதட்ட 6 ஆக பதிவாகியுள்ளது.
கன்செப்ஷியான் நகரத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் ஒன்றில் சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
கடைகளில் இருந்து பொருட்கள் சூறையாடப்படுவதை தடுக்க காவல்துறையினர் தலையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகள் பசிபிக் கடல்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்திற்கு பரவின. சுனாமி எச்சரிக்கை 53 நாடுகளில் விடுக்கப்பட்டது. எனினும் இந்த சுனாமி அலைகள் எதிர்பார்த்ததை விட சிறியதாகவே இருந்தன, சேதங்களும் ஏற்படவில்லை. ஆகவே சுனாமி எச்சரிக்கையின் தீவிரத்தை குறைத்து அறிவித்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவில் புயல்- 19 பேர் பலி
புயலில் சிக்கிய வீடொன்று - பிரான்ஸ் |
மேற்கு ஐரோப்பா ஊடாக தாக்கியுள்ள புயல்காற்றினால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை உயிரிழந்துள்ள பதினைந்து பேரில் பலர் நீரில் மூழ்கியும் சிலர் முறிந்து விழுந்த மரக்கிளைகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பைனில் கார் ஒன்று மரத்தில் மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர்.
பிரான்சில் மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் அங்கு மில்லியன் கணக்கானோர் மின்சாரமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாலும் ரயில்கள் தாமதமானதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் கலைக்கப்பட்ட, சதாம் ஹுசைன் இராணுவத்தின் அதிகாரிகளை மீண்டும் படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை
இராக்கில் தேர்தல் பிரசாரங்கள் |
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் கீழ் பணியாற்றிய ஆயிரக்கணக்கான இராணுவ அதிகாரிகளை மீள இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
புதிய இராக்கிய இராணுவப்படையில் இவ்வாறு மீள இணைத்துக்கொள்ளப்பட்ட இராணுவகுழுவில் இறுதியாக 20 ஆயிரம் பேர்வரையில் அடங்கியிருந்தனர்.
இராக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக பாக்தாத்தில் உள்ள பி.பி.சி செய்தியாளர் குறிப்பிட்டார்.
இராக்கில் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து அங்கு 2003ம் ஆண்டில் சதாம் ஹூசைனின் இராணுவத்தை முழுவதுமாக கலைத்த நடவடிக்கை அங்கு இன ரீதியான வன்முறைகளை தூண்டக்கூடும் என பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமரின் சவுதி அரேபிய விஜயத்தின் இரண்டாம் நாள்
மன்னர் அப்துல்லா மற்றும் மன்மோகன் சிங் (2006 இல்) |
சவுதி அரேபியாவுக்கு மூன்று நாள் விஜயமாக சென்று இருக்கும் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் இரண்டாவது தினத்தன்று பொருளாதார விஷயங்கள் பிரதானமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ள முதல் இந்திய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் ஒரு பெரும் இந்திய தொழில் முனைவோர் குழுவும் சென்றுள்ளது.
ரியாத்தில் சவுதி அரேபிய தொழில் முனைவோர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய பிரதமர் இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என்று கோரினார்.
எரிசக்தி விவகாரத்திலும் சவுதி அரேபியாவுடன் அதிகளவு புரிந்துணர்வை இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் விற்பனை அதிகரிக்க சவுதி அரேபியா தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கச்சதீவு திருவிழா |
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பரப்பில் அமைந்துள்ள கச்சத்தீவின் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த பல ஆண்டுகளாக, பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
குறிப்பாக இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான ஆயுத மோதல் காரணமாக, கடந்த ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு செல்ல தமிழக மீனவர்கள் முயன்றபோது, அதற்கு இந்திய கடற்படையும் இலங்கை அரசும் உரிய அனுமதிகள் அளிக்காமல் தடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
சில ஆண்டுகளில் இந்த திருவிழா முற்றாக நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் தோற்கடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு நடக்கும் முதல் திருவிழா என்பதால், கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா குறித்து தமிழ்நாட்டின் தென் பகுதியிலும், இலங்கையின் வடக்கிலும் மேலதிக ஆர்வம் காணப்பட்டது.
இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவு சென்று சுமுகமான சூழ்நிலையில் திருவிழா நடத்தியதாக கச்சத்தீவு சென்றிருந்த ஹிந்து நாளிதழின் செய்தியாளர் ஜெய்சங்கர் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை யாழ் மறை மாவட்டம் நல்ல முறையில் செய்திருந்ததாகவும், இந்திய இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இந்தோனேசியாவில் தடுப்பு முகாமொன்றில் உள்ள இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டம்
இந்தோனேசியாவில் பல இலங்கைத்தமிழர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் |
இந்தோனேசியாவில் தஞ்சும்பினேங் என்ற இடத்தில் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்கள் பதினொருபேர் தம்மை சுதந்திரமாக வெளியில் நடமாடவோ அல்லது வேறொரு நாட்டில் தஞ்சம் பெறவோ அனுமதிக்கவோ வேண்டுமென கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெண்கள் சிறுவர்கள் உள்ளடங்கலாக 25 இலங்கைத்தமிழர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பலர் ஒருவருடத்துக்கும் அதிகமான காலம் அங்கு உள்ளதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத்தமிழர் ஒருவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
தஞ்சும் பினேங் தடுப்பு முகாமிலிருந்து தமிழோசைக்கு கருத்துதெரிவித்த அவரின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்
ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் தி்ல்லியில் பலத்த பாதுகாப்பு
இந்திய ஹாக்கி வீரர் |
புது தில்லியில் ஹாக்கி போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களையும் 12 அணிகள் தங்கியுள்ள விடுதிகளை சுற்றியும் பொலிஸாரும், சிறப்பு அதிரடி பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் அடுத்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இன்னும் பெரிதான மூன்று முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒரு ஒத்திகையாகவும் இந்திய பாதுகாப்பு படையினர் பார்க்கின்றனர்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அதிகாரிகள் அச்சமுற்று இருப்பதால், அவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இந்தியாவில் அடுத்த மாதம் மிகப்பிரபலமான இந்தியன் பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அக்டோபர் மாதத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன, அதன் பின்னர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஒரு சில போட்டிகளில் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளை பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கவுள்ளதால், இந்த போட்டிகளை சீர்குலைப்பதில் தீவிரவாதிகள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு பெரும் விளம்பரம் கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’