வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுவிக்கவும்


ஜெனரல் சரத் பொன்சேகாவோ அல்லது ஜே.வி.பி.யோ எந்தவிதமான சதித் திட்டங்களையும் தீட்டவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறான இட்டுக் கட்டப்பட்ட கதைகளை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகா உட்பட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க் கட்சிகளின் மீது சேறு பூசும் கலாசாரத்தை அரசாங்கம் விடுவதாக இல்லை. பொதுச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. கட்சியினர் ஆகியோர் இந்நாட்டில் இரத்தக் களரி ஒன்றை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டங்களைத் தீட்டியதாக அரச தரப்பு குற்றம் சாட்டியிருக்கின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித அடிப்படையும் கிடையாது. எனவே பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இத்தகைய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரிக்கின்றது. அத்துடன் அரசாங்கம் கூறி வருகின்ற காரணங்களையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜே.வி.பி. கட்சி மிகவும் தெளிவான முறையில் ஜனநாயக ரீதியாக செயற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவ்வாறு ஜனநாயக ரீதியில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட அக் கட்சி மீது அரசாங்கம் வெறுமனே குற்றம் சுமத்துகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறு தினமான 27ஆம் திகதி புதன்கிழமை ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்கியிருந்த சினமன் லேக்சைட் ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு எமது கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

எனவே அரசாங்கம் கூறுகின்ற பொய்யான கட்டுக் கதைகளைப் போல் அங்கு எந்தவிதமான சதித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன்.

அத்துடன் தேர்தலில் ஜெனரல் பொன்சேகா வெற்றி பெற்றால் அதன் பின்னர் அமையவிருக்கும் கூட்டு அரசாங்கத்தில் என்னை நீக்கிவிட்டு ஒரு அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கும் ஜெனரல் பொன்சேகாவும் ஜே.வி.பி.யும் தீர்மானித்திருந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொய்க் கதையொன்றை அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

சதித் திட்டங்கள் என்று கூறுகின்ற அரசாங்கமே இவ்வாறான சதி முயற்சிகளை அறிமுகப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜெனரல் பொன்சேகா பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் அவருடன் சேர்த்து சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா உள்ளிட்ட 50 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’