வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குற்றப்பதிரிகைக்கு வாக்குமூலம் தேவையில்லை பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களே போதும்


இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது. அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமுகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெனரலின் வாக்குமூலமும் அதில் பதியப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதற்கான வாக்குமூலத்தை வழங்க ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார் என்று செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது குறித்து கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா தலைமையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர் வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

தான் தற்போது இராணுவ அதிகாரி அல்ல என்றும், சாதாரண பொதுமகனான தன்னிடம் இராணுவத்தினர் வாக்குமூலம் பெற முடியாது, அதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியே அவர்களிடம் வாக்குமூலம் வழங்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டமை மற்றும் ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தின் உயரதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலமளிக்க மறுத்த போதிலும் அவருக்க எதிரான சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்குமூலம் வழங்குவதற்கு ஜெனரல் பொன்சேகா மறுதலித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இராணுவம் தீர்மானித்துள்ள அதேவேளை இராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

ஜெனரால் சரத் பொன்சேகாவின் கைதானது இராணுவ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும். தவிர இதுவொரு அரசியல் நடவடிக்கையல்ல. இந்நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை முழுமையடைந்ததன் பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு அழைப்பதா? இல்லையா?, இராணுவத்தின் எந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும். இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முக்கிய அதிகாரியாக இராணுவ தளபதி காணப்படுவார்.

சாட்சிகளை நெறிப்படுத்துவதென்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சிகளைத் திரட்டி அந்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதாகும். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா? இல்லையா? எனும் கேள்விகள் இங்கு அநாவசியமானவை.

காரணம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைக்கு அவருடைய வாக்குமூலம் முக்கியப்படுவதில்லை. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் அவர் இராணுவத்தினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியாது.

எதிர்வரும் நாட்களில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவர் வழங்குவாராவா? அப்படி அவர் வழங்கவில்லையாயின் அதற்கு சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்ட நிபுணர்கள் அறிவிப்பார்கள். எது எவ்வாறெனினும் சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரும் சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இராணுவ சட்டத்தில் அதற்கு இடமுண்டு. இருப்பினும் அவ்வாறான சாட்சிகளிடம் அவர் இன்னமும் எவ்வித விசாரணையினையும் மேற்கொள்ளவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’