
ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திரா வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.
இவர்களது காதல் வீடுகளுக்குத் தெரிய வர இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது முறையல்ல என்று கூறி காதலைத் தடுத்தனர்.
இந் நிலையில் கடந்த 15ம்தேதி ரம்யாவும், நாகேஷும் வீட்டை விட்டு வெளியேறினர். மறுநாள் யாதகிரி குட்டா பகுதியில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். பின்னர் மடி கொண்டா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.
இதையறிந்த நாகேஷின் உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று மடிகொண்டா போலீசில் சரணடைந்தனர்.
நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.
ரம்யாவும் கதறி அழுதார். நாகேஷை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாகேஷை என்னை விட்டு பிரித்தாலும், அவன் கட்டிய தாலியை நான் கழற்றமாட்டேன். கடைசி வரை என் கணவன் நாகேஷ்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.
நாகேசுக்கு 18 வயதானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். அவன் என்னைத் தவிர வேறு பெண்ணை திருமணம் செய்யமாட்டான். அதுவரை காத்திருப்பேன் என்று கூறியபடி சென்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’