-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
ஹைதராபாத்தில் தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்.
சென்னை: ஹைதராபாத்தில் தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனம் பணியிடங்களுக்கு நடத்திய எழுத்துத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சென்ற, தமிழக இளைஞர்கள் தங்கள் திறமையால் 60 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை எதிர்நோக்கி இருந்த சூழலில், தெலங்கானா வெறியர்கள் தமிழக இளைஞர்களை பயங்கரமாகத் தாக்கியுள்ளனர்.
அதில் பலர் காயம் அடைந்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடி வந்தவர்கள் தமிழக காவல்துறையிடம். புகார். கொடுத்திருக்கிறார்கள். தேர்வு எழுதிய இளைஞர்களில் பலர் இன்னும் ஹைதராபாத்தில் இருந்து திரும்பவில்லை.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கையை ஆந்திர மாநில அரசு, ம் காவல்துறையும் மேற்கொள்வதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
பெல் நிறுவன நேர்முகத் தேர்வை நடத்துவதற்கும், அதில் தமிழக இளைஞர்கள் பாதுகாப்பாக பங்கேற்பதற்கும், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு நிறுவனத்தின் தேர்வில் கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், அதை மத்திய அரசின் கவனத்துக்கும், தமிழக அரசு கொண்டு சென்று நேர்முகத் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கும், தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
கடும் நடவடிக்கை எடுக்க தங்கபாலு வலியுறுத்தல்:.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆந்திர முதல்வர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், கனரகத் தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:.
ஹைதராபாத் நகரில் பெல் நிறுவன வேலைக்காக தேர்வு எழுதச் சென்ற தமிழக இளைஞர்கள் மீது தெலுங்கானா பகுதி வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி கடும் கண்டனத்திற்குரியதாகும்.
பெல் நிறுவன 4 ம் தகுதி ஊழியர்களின் வேலைக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14 ம் தேதி நடந்தது. அதில் ஐ.டி.ஐ. படித்த தமிழகத்தின் பல்வேறு மாவட்ட இளைஞர்கள் 800 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களுள் 600 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் 17 ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதற்காக ஹைதராபாத் நகரில் உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் குடியிருப்புகளில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் அக்குடியிருப்புகளுள் அத்துமீறி நுழைந்து தமிழக இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அதோடு பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழக ஊழியர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடமைகளையும், வன்முறையாளர்கள் பறித்துக் கொண்டனர்.
அக்கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பித்து தமிழக இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாமல் தமிழகம் திரும்பியுள்ளனர். நெஞ்சையே பதறவைக்கும் இக் கொடூரச் செய்தியை அறிந்து தமிழகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியத் திருநாட்டின் அடிப்படை மக்கள் வாழ்வுரிமைச் சட்டப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாநில மக்களுக்கும் எந்த மாநிலத்திலும் வாழ தொழில் புரிய, மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முழு உரிமை உண்டு.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக தெலுங்கானாப் பகுதி மக்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அரசு மற்றும் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். சுமூகமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
ஆனால், ஆந்திராவில் தமிழக இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்செயல் கொடுமை இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மிகவும் விரோதமானது. சோனியா காந்தி வழி காட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு நாட்டில் சாதி, இன, மதம் மற்றும் மாநில வெறித்தனச் செயல்பாடுகளின் தீவிரவாதத்தை ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஆந்திராவில் தமிழக இளைஞர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் நடைபெறும் பெல் நிறுவன நேர்முகத் தேர்வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அம்மாநிலத்திலுள்ள அனைத்து தமிழக மக்களின் வாழ்வுக்கும், தொழிலுக்கும் உரிய உத்திரவாதம் தரப்பட வேண்டும். அம்மாநில அரசுக்கான அக்கடமையை அம்மாநில முதல்வர் உரிய நடவடிக்கையின் மூலம் செயல்படுத்துவார் என்று பெரிதும் நம்புகிறோம் என்று கூறியுள்ளார் தங்கபாலு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’