-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
கார் உடைப்பு: அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு
சென்னை: தனது காரை நடிகர் அஜீத்தின் தூண்டுதலின் பேரில் அவரது ஆட்கள் உடைத்துவிட்டதாகவும், இதில் அஜீத் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு ப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீசில் புகார் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் நடிகர் அஜீத்தின் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இல்லாத அஜீத் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என போலீசார் கூறிவிட்டனர்.
சினிமாவில் ஸ்டண்டு மாஸ்டராக உள்ள ஜாக்குவார் தங்கம் என்பவர் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது கமிஷனரிடம் அவர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அண்ணல் காந்தியடிகள் தெருவில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் சண்டை பயிற்சி கலைஞராகவும், ஸ்டண்டு மாஸ்டராகவும் பணி செய்து வருகிறேன். 18-ந் தேதி அன்று (நேற்று) அதிகாலை சுமார் 2 மணியளவில் என் வீட்டின் கதவை யாரோ சத்தமாக தட்டினார்கள்.
எனது மகனும், சினிமா கதாநாயகனுமான சிரஞ்சீவி கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வெளியில் சுமார் 15 நபர்களுக்கு மேல் கையில் பட்டா கத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாறை போன்ற ஆயுதங்களோடு நின்றனர்.
நடிகர் அஜீத்தின் மானேஜர் தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர், அஜீத் ரசிகர் மன்றத்தின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடியாட்கள் வெளியில் நின்றனர்.
உருட்டுக்கட்டையால் வீட்டின் ஜன்னல்களை அடித்து எனது சாதி பெயரையும் சொல்லி ஏளனமாக திட்டினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த என் மகன் கதவை திறக்காமல் வீட்டிற்குள் இருந்தபடியே செல்போனில் என்னிடம் பேசினான்.
நான் கதவை திறந்து வெளியில் வராதே, அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யட்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அந்த கும்பல் எனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டார்கள். சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். நீண்ட நேரம் அவர்கள் எனது வீட்டின் முன்பு நின்று என்னையும், எனது குடும்பத்தை பற்றியும் தாறுமாறாக திட்டி கோஷம் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நான் உடனடியாக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இந்த புகார் மனுவை கொடுக்கிறேன்.
சினிமாவில் நான் சேர்த்து வைத்திருந்த புகழை எல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நண்பர் அஜீத்தின் நேரடி தூண்டுதலின் பேரில் அவருடைய மானேஜர், ரசிகர்மன்ற, தென் சென்னை மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அஜீத் ஏவி விட்ட ரவுடி கும்பலிடம் இருந்து என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றுவது போலீசாரின் கடமையாகும். என்னையும், எனது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி விட்டு சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்..." என்று கூறியிருந்தார்.
14 பேர் மீது வழக்கு
இந்த மனுவை வாங்கி பதிவு செய்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தியாகராய நகர் துணை கமிஷனர் பெரியய்யாவை விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் மனுவையும் அவரது வீட்டையும், காரையும் சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களையும் துணை கமிஷனர் பெரியய்யாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அஜீத் மீதும் அவரது மானேஜர் மற்றும் அடியாட்கள் மீதும் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜீத்தைக் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் போலீசாரிடம் கூறிய ஜாகுவார் தங்கம், தனக்கு வேண்டப்பட்ட அரசியல்வாதிகள் மூலமும் இது தொடர்பாகப் பேசினார். இதனை அவரே நிருபர்களிடமும் கூறினார்.
அஜீத் மீது வழக்கு இல்லை!
இந்த நிலையில் அஜீத் மீது வழக்குப் பதிவு செய்து விட்டதாகவும், அவர் ஜாமீனில் கூட வெளிவரா முடியாதபடியான பிரிவுகளில் 8 வழக்குகள் பதிவு செய்துவிட்டதாகவும் ஜாகுவார் தங்கம் தரப்பில் செய்தி பரப்பப்பட்டது.
இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்த போது, "தங்கம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜீத்தின் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஜீத் சம்பவ இடத்தில் இல்லை என்பதால் அவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யவில்லை" என்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’