வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

எழுதுமட்டுவாள் கரம்பகம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்றம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சியின் பயனாக பாதுகாப்பு கருதி ஏற்கனவே மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த தென்மராட்சி கிழக்குப் பிரதேசமான எழுதுமட்டுவாள் கரம்பகம் ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் பொதுமக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் இன்று முதல் அப்பகுதிகளில் பொதுமக்கள் மீளக்குடியேற முடியும்.

இன்று தென்மராட்சிப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் கிழக்குப் பகுதியான எழுதுமட்டுவாள் ஜே-334 கிராம சேகவர் பிரிவிலுள்ள பகுதிகளையும் கரம்பகம் ஜே-330 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் அப்பகுதிப் பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சி.ஸ்ரீனிவாசன் 523வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹேமந்த பண்டார ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமலிருந்த கரம்பகம் எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளது. இன்றைய தினம் அப்பகுதியில் மீளக்குடியேறத் தயாராக இருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழ்நிலையில் நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றை ஈடுசெய்யும் பொருட்டு தொடர்ந்தும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாகப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி ஏனைய பிரதேசங்களில் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்த மக்கள் இன்றைய தினம் முதற்கட்டமாக எழுதுமட்டுவாள் கரம்பகம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இன்னமும் விடுவிக்கப்படாதிருக்கும் எழுதுமட்டுவாள் வடக்குப் பகுதியை ஓரிரு வாரங்களில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதிகளில் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’