இ லங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று திங்கட்கிழமை 'வடக்கு - தெற்கு ஒத்துழைப்பு : விவகாரங்களும் எழுந்துவரும் சவால்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது.
இதேவேளை, இந்தியா தனது கொள்கைகளை ஏனைய நாடுகளின் மீது திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டதில்லை. இருதரப்பும் பயன்பெறும் வகையில் தான் எப்போதும் செயற்பட்டு வருகிறது.
வடக்கு - தெற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து நீடித்தால் தான் கடனுதவித் திட்டங்களை சிறப்பாக செயற்படுத்த முடியும். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உட்கட்டமைப்பு, அனல் மின்சாரம், மின் விநியோகத்துறைகளில் இந்தியா முதலீடுகளை செய்துள்ளது.
இந்திய தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 161 நாடுகளைச் சேர்ந்த 9,000 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் இந்திய பல்கலைக் கழகங்களில் 2,300 பேருக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் 100 பயிற்சி நிலையங்களைத் தொடங்க இந்தியா உறுதி அளித்துள்ளதுடன் குடிநீர் திட்டங்கள், மின்சார திட்டங்களுக்கும் அதிகளவில் கடனுதவி வழங்கியுள்ளது.
வளரும் நாடுகளுக்கான அதிகாரபூர்வ கடனுதவித் திட்டத்தை வளர்ந்த நாடுகள் நிறுத்தியுள்ளமையானது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’