வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 ஏப்ரல், 2013

துன்புறுத்தல்கள் இலங்கையின் பிரதான மனிதஉரிமைப் பிரச்சினை: அமெரிக்கா


விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோரும், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் இலங்கையின் பிரதானமான மனிதஉரிமைப் பிரச்சினையாகும் என்று அமெரிக்கா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழிலாளர், ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரப் பிரிவினால் மனிதஉரிமைகள் நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையில், இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம், ஆட்சி நிர்வாகத்தில் மேலோங்கியிருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல்கள் மோசடிகள் நிறைந்தவை அரசபடையினர் குடியியல் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், தேர்தல்கள் மோசடிகள் நிறைந்தவை என்றும், இதில் ஆளும்கட்சியினரால் அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடியியல் சமூகச் செயற்பாட்டாளர்களும், விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோரும், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களும் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் சிறிலங்காவின் பிரதானமான மனிதஉரிமைப் பிரச்சினை என்று இந்த அறிக்கை கூறியுள்ளது. ஆட்கள் காணாமற்போனது தொடர்பாக விசாரணைகளோ அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவோ இல்லை என்றும், காவல்துறையின் சித்திரவதைகள், தாக்குதல்கள் தொடர்வதாகவும், ஊடகத்துறை மற்றும் நீதித்துறை மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுள்ளதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் அரசபடைகள் மற்றும் அரசஆதரவு துணை ஆயுதக்குழுக்களின் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், இலங்கையில் இன்னொரு பாரிய மனிதஉரிமைப் பிரச்சினை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை படையினர் மற்றும் காவல்துறையினரால் காரணமற்ற கைதுகள், துன்புறுத்தல்கள், தடுத்துவைப்புகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், மோசமான சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் மறுப்பு நீதித்துறைச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளான, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை, ஒன்றிணையும் உரிமை, நடமாடும் உரிமை என்பன கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நடமாட முடியாமல் தடுப்பு தீவின் பெரும்பாலான எல்லா இடங்களுக்கும் செல்ல முடிகின்ற போதிலும் வடக்கில் தொடர்ந்தும் இராணுவ, காவல்துறை சோதனைச் சாவடிகளில் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்கள் மக்கள் நடமாட முடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதால், சுயதணிக்கையை அவர்கள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாமை அரசாங்கத்தின் மிகப்பெரிய குறைபாடு என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பெண்களும், சிறார்களும் துன்புறுத்தப்படுவதும், தமிழர்கள் மீதான இனரீதியான பாகுபாடுகள் தொடர்வதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகச்சில அதிகாரிகளை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தியுள்ள போதிலும், 2009இல் முடிவுக்கு வந்த போரில் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்ட மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஆயுதக்குழுக்களுக்கும் அரசபடைகளுக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன என்பதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்து சனல் 4 வெளியிட்ட காணொலி தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை என்றுட் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அதிகரிப்பு மேலும், வவுனியா, வெலிக்கடைச் சிறைகளில் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரமும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில், விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் சம்பவங்களுடன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஏனைய படையினர் மற்றும் துணை ஆயுதக்குழுக்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தாம், புனர்வாழ்வு முகாம்களில் அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படதாகவும் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் அமெரிக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பெரும்பாலும், ஆயுதப்படையினர், காவல்துறையினர், படையில் இருந்து தப்பியோடியோர், ஆயுதக்குழுக்களின் உறுப்பினரகளோ தொடர்புபட்டுள்ளதாக நம்பகமான அறிக்கைகள் கிடைத்துள்ளது என்றும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின்போது இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போதல்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்களில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளதாக மனிதஉரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுவதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது. இன்னமும் இடம்பெயர்ந்தே வாழ்கின்றனர் போர்க்காலத்தில் இராணுவ முகாம்களை சுற்றிய பொதுமக்களின் பெருமளவு நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டதாகவும், இதனால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்தே வாழ்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’