ஜெனிவாவுக்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு வீட்டை நிர்மாணிப்பதற்கு ஒரு கல்லைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு பெற்றுக்கொடுத்தார்களா? என்பது தொடர்பில் ஜெனிவாவில் விளக்கப்படுத்த முடியுமா" என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்றும் அவர் சூளுரைத்தார். மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நீர்விநியோகத்திட்டம் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"இலங்கையில் வாழும் மக்கள் மூன்று தசாப்தங்களான பயங்கரவாத செயற்பாடுகளினால் பதிப்புக்குள்ளாகியிருந்தனர். அந்த நிலையினை இந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்து சகலரும் அனுபவிக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். அந்த சமாதானத்தை குறிப்பாக வட மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்ற நிதிகளில் அதிகமானவை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றது.
வடக்கில் புலிகளினால் முற்றாக அழித்து துவம்சம் செய்யப்பட்ட பல கட்டிடங்களை மீள் புனரைமைத்துள்ளோம்.பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன,மதவாச்சி தலை மன்னார் புகையிரதப் பாதை நிர்மானப் பணிகள் வேகமாக இடம்பெறுகின்றன.
அதேபோல் புத்தளம் மன்னார் ஊடான யாழ்ப்பாண பாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. நவீன வைத்திய சாலைகள்,பிரதேச செயலகக்கட்டிடங்கள் மற்றும் தேவையான பாடசாலை கட்டிடங்கள் என்பன இன்று நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. இவைகளெல்லாம் இங்கு வாழும் மக்களுக்காகவே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் 80 சதவீதமான வாழும் பௌத்தர்களால் வழிபடும் தலதா மாளிகையின் நிர்மாணத்துக்கு கூட வழங்ககப்படாத நிதிகள் மடு தேவாலய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை உலகில் கத்தோலிக்க மக்களது பிரதான வணக்க தலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எமது பிரதான நோக்கமாகும்.அதே போன்று தமிழ் மக்களது பிரசித்தி பெற்ற 5 திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்புக்கு என 350 கோடி ரூபாய் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகளெல்லாம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளாகவுள்ளது.இவ்வாறு எம்மால் முன்னனெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை தடுப்பதற்கும்,மக்கள் அதனை அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தோடு சர்வதேச புலம் பெயர் சமூகத்திடம்,நாடுகளிடமும் சென்று தமிழ் கூட்டடைப்பு பிழையான தகவல்களை வழங்கிவருகின்றது.
இடம் பெயர்ந்து மெனிக் பாம் நலன்புரி முகாமில் தங்கியிருந்த 3 இலட்சம் தமிழ் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் மிகவும் கட்சிதமான முறையில் அவர்களது வாழ்க்கைக்கு தேவையானவற்றை வெற்றிகரமாக மீள்குடியேற்றிவந்தார்.
அவர் ஆற்றிய பணிகள் இந்த வன்னி மக்களால் என்றும் நினைவு கூறப்பட வேண்டியுள்ளது. அதனை மறந்து எவராலும் செயற்பட முடியாது. இந்த அரசாங்கம் அவருக்கு நன்றி கூறுகின்றது. அமைச்சர் றிசாத் பற்றி சில ஊடகங்கள் இன்று பிழையான செய்திகளை வெளியிட்டு வருகின்றதாக அவர் என்னிடம் கூறினார். அரசியல்வாதிகளுக்கு இந்த விமர்சனங்கள் வருவது இயல்பு, அதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நான் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
சவால்களுக்கும் ,தடைகளுக்கும் மத்தியில் தமது பணியினை ஆற்றக் கூடிய தைரியமும், துணிவும் அமைச்சர றிசாத் பதியுதீனிடம் இருக்கின்றது என்பதை நானறிவேன். புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும்,எந்த சமூகத்தை, இனத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும்,அவர்களது தயாகத்தில் வாழ வேண்டிய உரிமை அவர்களுக்கு இருகின்றது. அன்று மெனிக் பாமில் இருந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுத்த போது, அவர்களை மீள்குடியேற்ற விடாமல் சர்வதேச நிறுவனமொன்றின் பிரதிநிதி அம்மக்களை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த பஸ் வண்டிக்கு முன்பாக வந்து நின்று செயற்பட்டதை நினைவு கூற விரும்பகின்றேன்.
அவ்வாறு அதற்கு பயந்து இம்மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் அவர்கள் அகதி முகாமில் வாழ நேரிட்டிருக்கும். அதனையும் காரணமாக கொண்டு ஜெனீவாவுக்கு சென்று அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சதித்திட்டத்தை தற்போது அங்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பின் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்திருப்பர்.
தேர்தல் காலங்களில் இங்கு வந்து மக்களின் இரத்தத்தை சூடேற்றி, அவர்களை பிழையாக வழிநடத்தி அதன் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனையும் இது போன்ற அரசியல் வாதிகள், அப்பாவி சமாதானத்தை இனவுறவை விரும்பும் இம்மக்களை இனக் கூறுகளாக பிரித்தாள நினைக்கும் எண்ணங்களை கைவிடுமாறு கேட்கின்றேன்.
இந்த நாட்டில் ஏற்படடுள்ள இந்த சமாதானத்தை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக இந்த சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்" என்றார்.
இந்நிகழ்வில் கைத்தொழில், வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர ஆகியோரும் உரையாற்றினர். முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அன்டன் உட்பட பலரும் இந்த விழாவில் பிரசன்னமாகியிருந்தனர்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’