வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கிளிநொச்சி பொதுச் சந்தை இரண்டாவது தடவையாகவும் திறப்பு



கிளிநொச்சி நகரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தை நேற்று மீண்டும் கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 250 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச் சந்தையின் முதற்கட்டக் கட்டிடம் கடந்த 2509.2013 அன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தையே இன்று மீண்டும் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் வை. குகராஜா திறந்து வைத்துள்ளார். இந்தச் சம்பவம் சந்தை வர்த்தகர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட சந்தையை எதற்காக மீண்டும் இன்று திறந்து வைத்துள்ளனர் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சந்தை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, பாரம்பரிய கைத்தொழிலகள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் முயற்சியினால், இந்தச் சந்தைக்கு 2010 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 25.09.2012 இல் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்;ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, மாகாணசபையின் செயலாளர் விஜயலட்சுமி, உள்ளுராட்சி ஆணையாளர், சந்தை வர்த்தகர் சங்கப்பிரதிநிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மொத்தமாக 250 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் பொதுச் சந்தையின் முதற்கட்டத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் தொடரும் என்று அறிவித்திருந்தார். எனினும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட சந்தையில் தமக்கு உரிமம் கிடைக்க வேண்டும் என சில வர்த்தகர்கள் கரைச்சிப் பிரதேச சபைக்கெதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அடுத்து, நீதி மன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து இந்தச் சந்தை மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. எனினும் கடந்த 07.02.2013 அன்று இடைக்காலத்தடையுத்தரவு நீக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டாவது தடவையாக இந்தச் சந்தையை நேற்று மீண்டும் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திலிங்கம் குகராசா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செல்வம் பிரதேச சபையின் உப தவிசாளர் வடிவேல் நகுலன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இதேவேளை இந்தச் சந்தையின் இரண்டாம் கட்ட வேலைகள் பூர்த்தியாகும் வரையில் வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 16 மில்லியன் ரூபாய் செலவில் 216 தற்காலிகக் கடைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றை எதிர்வரும் 16 ஆம் திகதி திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதைக் குழப்பும் முகமாகவே இந்த அவசர ஏற்பாட்டினைக் கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் முயற்சித்திருப்பதாக வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’