இலங்கை சட்டக் கல்லூரி விடயங்களில் என்னால் தலையிட முடியாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டக்கல்லூரியின் முகாமைத்துவம் மற்றும் நிருவாகம் ஆகியவற்றை மேற்கொள்வது சட்டக் கல்லூரி சட்டத்தின் கீழ் நியமிக்கப்படுகின்ற சட்டக் கல்லூரி பேரவையின் மூலமேயாகும் என அவர் குறிப்பிட்டார்.
சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
"2013 ஆம் ஆண்டுக்கு இலங்கை சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதித்து ;கொள்ளும் பிரவேச பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், குடியியல் அமைப்புகள் பல மற்றும் ஓர் அரசியல் கட்சி என்பன ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு, சட்டக்கல்லூரி பிரவேசப் பரீட்சை நடாத்தப்பட்ட விதத்தைப் பற்றியும் இறுதி பெறுபேறுகள் சம்பந்தமாகவும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளன.
அதன் பின்னர் இந்த ஒழுங்கமைப்புக்கள் மேலும் மாணவர் அமைப்புகள் சிலவற்றுடன் சேர்ந்து பலவிதமான ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றன.
ஊடக அறிக்கையின்படி இவ்வாண்டில் சட்டக் கல்லூரி உட்பிரவேசத்திற்காக 78 முஸ்லிம் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இயல்புக்கு மாறான ஒரு விடயமென இந்த எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் அமைப்புகள் கூறுகின்றன.
மேலும் அவர்கள் தெரிவித்துக்கொள்வது இந்த பிரவேசப் பரீட்சையில் முதன்மையாக சித்தி பெற்றுள்ள மூன்று மாணவர்களும் முஸ்லிம் இனத்தவராக இருப்பதாலும், சட்டக் கல்லூரிக்காக தெரிவு செய்யப்பட்;டுள்ள முதல் 50 மாணவர்களுக்கிடையே 28 பேர் முஸ்லிம் இனத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனாலும், சட்ட பிரவேச பரீட்சை பற்றி உள்ள சந்தேகம் மேலும் அதிகரிக்கின்றது என்பதாகும். முதல் சந்தர்ப்பங்களில் நடாத்தப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது எடுத்துக்காட்டப்பட்ட ஒரு பிரதான குற்றச்சாட்டானது, சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை வினாத்தாள்களை ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்தவர்கள் அவ்வினாத்தாள்களை முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு முன்னரே பெற்றுக்கொடுத்த காரணத்தினால் அப்பரீட்சார்த்திகளுக்கு விசேடமாக நன்மை பயக்கும் நிலைமை ஏற்பட்டிருந்ததென்றும் ஆதலால் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது என்பதாகும்.
78 முஸ்லிம் பரீட்சார்த்திகள் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக தகைமைகள் பெற்றுக்கொண்டிருப்பது தொடர்பாக நீதி அமைச்சர் என்ற முறையில் என் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அப்போது விசேடமாக எழுதப்பட்டதொரு விடயமாவது நீதி அமைச்சராக என்னால் சட்டக் கல்லூரி உட்பிரவேச பரீட்சை நடாத்துதல் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற செயற்பாட்டின்போது முறையற்ற தலையீடொன்று செய்யப்பட்டு முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு விசேட கவனம் காட்டப்பட்டுள்ளது என்பதாகும்.
இலங்கை சட்டக் கல்லூரியின் முகாமைத்துவம் மற்றும் நிருவாகம் செயற்படுவது சட்டக் கல்லூரி சட்டத்தின் கீழ் நியமிக்கப்படுகின்ற சட்டக் கல்லூரி பேரவையின் மூலமேயாகும்.
இப்பேரவையின் தலைவர் பதவிக்காக பதவி நிலையில் பிரதம நீதியரசர் நியமனம் பெறவதுடன், அதன் ஏனைய உறுப்பினர்களாவது இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், சொலிஸிடர் ஜெனரல், இலங்கை சட்டத்ரணிகள் சங்கத்தினால் பெயர் குறித்துரைக்கப்படுகின்ற இருவர் மற்றும் நீதி அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற பிரதிநிதிகளாவர்.
மேற்கூறிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி நீதி அமைச்சர் பதவியை வகிக்கின்றவருக்கு சட்டக் கல்லூரியின் அலுவல்களுக்காக தலையிடுவதற்குள்ள சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகும்.
அவற்றுள், சட்டக் கல்லூரி பேரவையின் பணிப்பாளர்களை பெயர் குறித்துரைத்தல், அப்பேரவையினால் விதிக்கப்படுகின்ற விதிகளுக்காக இணக்கத்தைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அந்த விதிகள் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் ஆற்றுப்படுத்தப்படுதல் குறிப்பிட முடியும்.
இந்த விடயங்கள் தவிர நீதி அமைச்சருக்கு சட்டக் கல்லூரியின் நாளாந்த அலுவல்களில் அல்லது வேறு அலுவல்களுக்காக தலையிடுவதற்கு எவ்வித சந்தர்ப்பங்களும் இல்லை.
சட்டக் கல்லூரி இலங்கை மாணவர்களுக்கிடையே பிரபல்யம் அடைந்ததுள்ளதனால் சட்டக் கல்லூரி பிரவேசத்திற்காக பெருமளவிலான விண்ணப்பங்கள் அனுப்பப்படுவதுடன் 2000ஆம் ஆண்டு தொடக்கம் சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை நடாத்தும் கருமம் பரீட்சைத் திணைக்களத்திற்கு உரித்தாக்கப்பட்டது.
சட்டக் கல்லூரி உட்பிரவேச பரீட்சை நடாத்தும் போது சட்டக் கல்லூரி எவ்வித தலையீடும் செய்யாததுடன் பரீட்சை நடாத்தப்பட்டதன் பின்னர் பரீட்சை திணைக்களத்தினால் மொத்தப் பெறுபேறுகளை சட்டக் கல்லூரிக்கு அறிவித்து அனுப்பப்படும்.
அப்பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் சட்டக்கல்லூரி பேரவை கூடி சம்பந்தப்பட்ட ஆண்டுக்காக எத்தனை மாணவர்கள் அனுமதித்துக் கொள்ளப்படுகின்றார்கள் என்ற காரணமும், அதற்காகத் தேவைப்படுகின்ற வெட்டுப்புள்ளி எவ்வளவு என்பதும் தீர்மானிக்கப்படுகின்றன.
அதன்பின்னர் சட்டக் கல்லூரியானால் அத் தீர்மானத்தை பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்படுவதுடன் பரீட்சை திணைக்களத்தினால் அம் மூலப் பிரமாணங்களுக்கு அமைவாக சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கு தகைமை பெறுகின்ற மாணவர்களின் பட்டியலொன்று சட்டக் கல்லூரிக்கு அனுப்பப்படுகின்றது.
அதன் பின்னர் சட்டக் கல்லூரியினால் சட்டக் கல்லூரிக்கு அனுமதிப் பெறுவதற்கான தகைமைகளைப் பெற்ற மாணவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பப்படுகின்றது.
சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை பற்றி எழுந்துள்ள சிக்கலான நிலைமை பற்றி சட்டக் கல்லூரி பேரவை, சட்டக் கல்லூரியின் அதிபர் மற்றும் பரீட்சை ஆணையாளர் சட்ட பிரவேச பரீட்சை உரியவாறு அந்தரங்கமாக நடாத்தப்பட்டு பெறுபேறுகள் வழங்கப்பட்டுள்ளதென ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
சட்ட பிரவேச பரீட்சை வினாத்தாள் தயார் செய்து வினாத்தாள்களை மதிப்பிடுதல் மற்றும் புள்ளிகளை பெற்றுக்கொடுத்தல் என்பன பரீட்சைகளை நடாத்தும் முறைப்படி வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டுள்ளதென பரீட்சை ஆணையாளர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குடியியல் ஒழுங்கமைப்புகளால் பரீட்சையில் சட்டக்கல்லூரி பிரவேச பரீட்சையின் பெறுபேறுகளை இனவாதத்தின் அடிப்படையில் விமர்சிக்கப்படுதல் கவலைக்குரியவிடயமென குறிப்பிட விரும்புகின்றேன்.
இவ்விதமாக 78 முஸ்லிம் அபேட்சகர்கள் சட்டக் கல்லூரி பிரவேச பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் மீது, பரீட்சை நடாத்துவதில் அக்கிரமம் நடைபெற்றதா? அல்லது அப்பரீட்சார்த்திகளின் திறமையின் மீது நடைபெற்றதா என்பதை ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டுமென நினைக்கின்றேன்.
ஆயினும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதாவது, சட்டக் கல்லூரி பேரவை, சட்டக் கல்லூரியின் அதிபர் மற்றும் பரீட்சை ஆணையாளர் சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சையின் நம்பகத்தன்மையை பற்றி, விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதினால் இந்த பிரச்சினை முஸ்லிம் இன அபேட்சகர்கள் அதிகமானோர் சித்திபெற்றுள்ள காரணத்தினால் மாத்திரமே சந்தேகத்திற்கு உட்படுத்தலாகாது என்பது எனது நம்பிக்கையாகும்.
இது சம்பந்தமான பிரச்சினை எழுந்ததன் பின்னர் நான் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்தாலோசனை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டேன். அப்போது தெரியவந்ததொரு விடயமாவது, 2009 ஆண்டு வரை தமிழ் மொழி மூலம் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக சட்டக் கல்லூரியில் வழங்கப்பட்ட கை நூலின் மொழிபெயர்ப்பு வேலைகளில் பல தவறுகள் இருந்தது.
ஆதலால் தமிழ் மொழி மூலம் பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் பாரிய பிரச்சினைகள் பலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் பின்னர் அதுபற்றி சட்டத்தரணிகள் பலர் விடயங்களை சமர்ப்பித்த பின்னர் அந்த கைநூல் சீர்செய்யப்பட்டது என்பதாகும்.
மேலும் இது தொடர்பாக ஆர்வம் காட்டிய சட்டத்தரணிகள் பலரால் சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றுவதற்கு ஆயத்தமாவோருக்கு துணை புரியும் வகுப்புகள் பல பிரதான நகரங்களில் நடாத்தப்பட்டதுடன், அதற்கு சமாந்தரமாக சட்டக்கல்லூரி கல்வி பற்றி ஆர்வத்தைக் கூட்டுகின்ற விதத்தில் உற்சாகம் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக 2009ஆம் ஆண்டின் பின்னர் சட்டக் கல்லூரிக்காக தமிழ் மொழி மூலம் தோற்றுவதற்கு முன்வந்த பரீட்;சார்த்திகளின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்தது தெளிவாகின்றது.
இறுதியாக, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் கீழ் அனைவருக்கும் கல்வித்துறையில் சமமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுப்பது என்ற கொள்கையின் காரணமாக சட்டக் கல்வி தொடர்பிலும் இதுவரை நிலவியவாறு அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் எவ்வித பாகுபாடுமின்றி பெற்றுக்கொடுப்பதற்கு இனிமேலும் ஒத்துழைப்போம் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்" என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’