இ
ந்த நாட்டை முன்னர் ஆட்சி செய்தவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் வரலாற்றில் பாரிய தவறுகளை விட்டுள்ளனர். அதுவே பரஸ்பர மொழி தெரியாத பிரச்சினை முதல் யுத்தம் வரையான பல்வேறு அழிவுகளுக்கு எமது நாட்டை இட்டுச்சென்றுள்ளது என்று இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரத்தில் சிறப்பாக சித்தியடையாத நிலையில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை மனிதவள அபிவிருத்தி மன்றம் ஏற்பாடுசெய்திருந்த இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்விருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய தொழிற்பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய இளைஞர்சேவைகள் மன்றம், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கடல்சார் பல்லைக்கழகம் போன்ற நிறுவனங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்குள்ள வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இங்கு அமைச்சர் டலஸ் தொடர்ந்து உரையாற்றுகையில், எனது சகோதர மொழியும் உங்களது தாய்மொழியுமாக இருக்கின்ற தமிழில் எழுதப்பட்ட தாள் ஒன்றின் உதவியின்றி உங்கள் முன்னிலையில் அம்மொழியில் பேசமுடியாது இருக்கின்றமைக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இந்த நிலைமைக்கு வித்திட்டவர்கள் கொள்கை வகுப்பாளர்கள்தான். அவர்கள் இந்த நாட்டின் வரலாற்றில் மிகப் பெரும் தவறுகளை விளைவித்துள்ளனர். அதன் வழிவந்த பரஸ்பர மொழி தெரியாமைதான் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் வரைக்குமான பல அழிவுகளுக்கு இட்டுச் சென்றது. நான் அரசியல்வாதி, மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர். எனக்கே இரண்டாவது மொழி தெரியாது. இந்நிலைமையை அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லக் கூடாது. இன்று பரீட்சை முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு விடுகின்றனர் - சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் என்று. சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவனை எல்லோரும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். சித்தியடையத் தவறிய பெருந்தொகை மாணவர்களை சமூகம் ஒதுக்கித் தள்ளுகின்றது. 3 ஏ சித்தியை எடுத்த மாணவனின் புகைப்படம் பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாக பிரசுரிக்கப்படுகின்றது. இரு தினங்களின் பின்னர் மோசமான பெறுபேற்றினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவன் பற்றிய செய்தி மூன்றாம் அல்லது நான்காம் பக்கத்தில் பிரசுரிக்கப்படுகின்றது. உயர்தரத்தில் சிறப்பாக சித்தியடையும் மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே. அவர்களை பாராட்டுகின்ற பெற்றோரும் சமூகமும் மீதமுள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களை கண்டு கொள்வதே இல்லை. இந்நிலைமை ஏற்படுவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் விட்ட தவறே காரணம் என்பேன். ஆனாலும், பல்கலைக்கழகம் மட்டும்தான் வாழ்க்கையல்ல. பட்டதாரியாக முன்னேறுவதற்கும் வாழ்க்கையில் சித்தியடைவதற்கும் பல வழிகள் இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பரீட்சை ஆணையாளரின் பெறுபேற்றினை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் 'பெயில்" ஆகிவிட்டதாக எண்ணுவது முட்டாள்தனம் இல்லையா? எனவே ஒவ்வொருவரும் தம்முள்ளே ஒளிந்திருக்கின்ற திறமைகளை இனம்கண்டு அத்துறைகளில் கற்க வேண்டும். அதற்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் உங்களுக்கு துணையாக அமையும். இந்நிலையில் 8 ஆம் தரத்துடன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு காலடி எடுத்து வைக்கும் ஒரு இளைஞன், என்.வி.கியு. மட்டம் 7 வரை கற்று யுனிவோடெக் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு பட்டதாரியாக வெளியேறலாம். மட்டம் 5 இற்கு அதிகமான தகுதியைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர், யுவதிகளுக்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தொழில்வாய்ப்பை வழங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். இதேவேளை, எமது தொழிற்பயிற்சி நிலையங்களை உங்களது காலடிக்கு கொண்டுவந்துள்ள நாம், ஜேர்மன்டெக் உயர் தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஒன்றை கிளிநொச்சியில் நிறுவவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’