தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டமை, அதன் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், கைது போன்ற சம்பவங்கள் அவரை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதி நடவடிக்கைகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு
யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் அண்மையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கு வெடி பொருள் களும், ஆபாச இறுவட்டுக்களும் கைப்பற்றப்பட்டதாகப் பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
அது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளரும், இணைப்புச் செயலாளரும் நீண்ட நேரம் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்பு இணைப்புச் செயலாளர் வேளமாலிகிதன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதற்குக் கூறப்படும் காரணங்களும் அங்கு இடம்பெற்ற சம்பவங்களும்,அதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட கைதும், அடுத்தடுத்த நாள்களில் அந்த காரியாலயம் இழுத்து மூடப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் எம்மிடையே பல கேள்விகளை எழுப்புகின்றன. இது நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், கொச்சைப்படுத்தவும், அச்சுறுத்தவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஏற்கனவே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்பு அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எவ்வித காரணமும் கூறப்படாமலே நீக்கப்பட்டது. அது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டபோதும், எவ்வித பலனும் கிட்டவில்லை.
ஆனால் அவரின் பாதுகாப்புப் பிரிவினர் தங்கியிருந்த காவல் நிலையிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டதாக இப்போது கூறப்படுகின்றது.
இந்த காவல் நிலை காரியாலயத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அங்கு ஒரு வெடிபொருள்கள் நிறைந்த பொதி கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதற்குள் என்ன இருந்தது என அங்கிருந்த எவருக்கும் திறந்து காட்டப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு பாதுகாப்புப் பிரிவினர் தங்கும் நிலைக்குள்ளிருந்து பொதி மீட்கப்பட்டமை, பொதிக்குள் வெடிமருந்து இருந்ததாகக் கூறப்படுவது, அந்தப் பொதியின் உள்ளே என்ன இருக்கிறது என எவருக்குமே காட்டப்படாமை போன்ற தொடர் சம்பவங்கள் இவை ஒரு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
அதேவேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்ற அடுத்தடுத்த நாள்களில் மேற்படி செயலகம் மூடப்பட வேண்டும் எனக்கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
வேறு காரணங்கள் கூறி அழைக்கப்பட்ட மக்களும், வீதியால் போனவர்களும் பலவந்தமாக இதில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். இதையும் கைது நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியாகவே நாம் பார்க்கின்றோம்.
சாவகச்சேரியில் கபில்நாத் என்ற மாணவன் கப்பம் கோரிக் கடத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டான். இது தொடர்பாகக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டவர்களில் ஈ.பி.டி.பி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் ஒருவர்.
அப்படியான ஒரு நிலையில் ஈ.பி.டி.பி.யின் காரியாலயங்கள் ஏன் இன்னும் மூடப்படவில்லை. தங்கள் முதுகுப் புண்ணை மறந்துவிட்டு மற்றவன் முகப்பருவை விமர்சிக்கும் முட்டாள் தனமல்லவா இது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரச தரப்பாலும், அரச ஆதரவுக் கட்சிகளாலும் ஏற்படுத்தப்படும் இடையூறுகளையும், தடைகளையும் பொருட்படுத்தாது, மக்கள் பணியாற்றி வருபவர்.
அது மட்டுமன்றி கிளிநொச்சி மக்களின் பரந்த அபிமானத்தைப் பெற்றவர். அது மட்டுமன்றி அரசும் அரச படைகளும் அரசுடன் இணைந்துள்ள கட்சிகளும் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி வருவதுடன், எதிர்த்துக் குரல் எழுப்புபவர்.
அதன் காரணமாக அவரையும், அவரின் பணிகளையும், கொச்சைப்படுத்தவும், பயங்கரவாத முலாம் பூசி முறியடிக்கவும், மக்கள் நலனுக்காக இடையறாது ஒலிக்கும் அவரின் குரலை நசுக்கவும், திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதி என்றே எமது மக்கள் திடமாக நம்புகின்றனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே கைது செய்பவர்களாகவும், சாட்சிகளாகவும், விசாரணையாளர்களாகவும் விளங்கும் நிலையில் நாம் நீதியை எதிர்பார்க்க முடியுமா?
எனினும், இப்படியான நடவடிக்கைகளின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் பணி தொடர்வதையோ, நியாயங்களுக்காகக் குரல் கொடுப்பதையோ நிறுத்தி விடவோ முடியாது என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்றுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’