வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 டிசம்பர், 2012

போருக்குப் பிந்திய அமைதி நிலையைச் சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி - ஐ.நா. பிரதிநிதிகளிடம் சட்டத்தரணி றெமீடியஸ்



2009 ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐ.நா. பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் சார்பாக எடுத்துரைத்த சட்டத்தரணி றெமீடியஸ், இதனைச் சீர்குலைப்பதற்குச் சில சக்திகள் திட்டமிட்டு முயற்சி செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) ஐ.நா.வுக்கான இலங்கை விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண தலைமையில் கடந்த (8) யாழ் குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த ஜப்பான், பங்களாதேஷ், நைஜீரியா, ரூமேனியா உள்ளிட்ட சில நாடுகளில் ஐ.நா.வுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதிகள் குழுவினரை யாழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரில்கோ உல்லாச விடுதியில் சந்தித்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போர் நடைபெற்றுவந்த காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் ஒரு மனித உரிமை சட்டத்தரணியாகக் கடமையாற்றியவர் என்ற வகையில் குடாநாட்டின் அன்றைய நிலைமைகளை நன்கறிந்துகொண்டிருப்பதாக இங்கு தெரிவித்த றெமீடியஸ், போருக்குப் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போர் நிறைவடைந்த பின்னர் சுமார் 900 வரையிலான அரசியல் கைதிகள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி அவர்களை விடுவித்திருப்பதாக இங்கு குறிப்பிட்ட சட்டத்தரணி றெமீடியஸ், இரண்டு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஒருவர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் இணைந்து மீண்டும் சமூக வாழ்வுடன் இணைந்துகொள்வதற்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள மனவிருப்பத்துடன் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

“போர் நிறைவடைந்த பின்னர் இதுவரையில் 10க்கும் குறைந்தளவானவர்களே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிலும் பெருமளவிலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்த அவர், அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு சில சக்திகள் மேற்கொண்ட குழப்ப நடவடிக்கைகள் காரணமாக அநியாயமாக சில மாணவர்கள் கைதுசெய்யப்படும் நிலைமை தோன்றியதாகவும், இது தற்போதைய அமைதி நிலையைச் சீர்குலைப்பதற்கு திட்டமிட்டு சில சக்திகள் மேற்கொள்ளும் சதி நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டினார்.

“யாழ் பல்கலைக்கழகச் சூழலில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை மக்கள் சிறிதும் விரும்பவில்லை. அமைதி சீர்குலைக்கப்படுவது குறித்து அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்துக்கு எதிராக ஒரு சில அரசியல் கட்சிகள் இணைந்து யாழ் நகரில் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ளாதது இதனைத் தெளிவாக எடுத்துக்காட்டியது” என்றார் சட்டத்தரணி றெமீடியஸ்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் சார்பாக முன்னதாக உரையாற்றிய பொறியியலாளர் சூரியகுமார், சுமார் 40 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் வாழ்ந்துவிட்டு, போர் நிறைவடைந்த பின்னர் தமது மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக திரும்பி வந்தவன் என்ற வகையில், 2009க்குப் பின்னர் போர் நடைபெற்ற பகுதிகளில் மிக வேகமாக அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதை தம்மால் தெளிவாக அவதானிக்க முடிவதாகக் கூறினார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் தலைமையில் ஆரம்பான இந்தச் சந்திப்பில், போருக்குப் பிந்திய மூன்று வருட காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் துரிதமாக ஏற்படுத்தப்பட்டு வரும் மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல், உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள், வீடமைப்பு, மின்சார வசதி, கல்வி, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பணிகளை விரிவாக காண்பியங்களுடன் கூடிய புள்ளிவிபரங்களுடன் விளக்கிக் கூறினார்.

“உலகில் எந்தவொரு நாடும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களை இவ்வளவு குறுகிய காலத்தில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றி, அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை துரிதமாக அமைத்துக்கொடுத்ததாக வரலாறில்லை. இது இலங்கை அரசாங்கம் ஈட்டியிருக்கும் ஒரு சாதனை” என்று குறிப்பிட்ட அவர், மேன்மைதங்கிய ஜனாதிபதி தலைமையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன், மாகாண ஆளுநர் என்ற வகையில் தாமும் இணைந்து இந்தப் பணிகளை துரிதமாக மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பொறியியலாளர்களான சூரியகுமார், ராமதாஸ், சட்டத்தரணி ரெங்கன், இந்து மதகுரு பாபு சர்மா, யாழ் இலங்கை வெளிநாட்டு இராஜதந்திரச் சேவையைச் சேர்ந்த தர்மகுலசிங்கம், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, சட்டத்தரணியும், யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.றெமீடியஸ், முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர் சிறிபதி வங்கி முகாமையாளர் சுபசீலன், வட மாகாண கல்வி அபிவிருத்திக்குழு தலைவர் செல்வவடிவேல், பாராளுமன்ற செய்தி இணைப்பாளர் சுதர்சன், சிரேஷ்ட  ஊடகவியலாளரும், கல்வி வழிகாட்டல் ஆலோசகருமான கோ.றுஷாங்கன், கடல்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், உள்ளிட்ட குழுவினர் ஐ.நா. பிரதிநிதிகளுடனான இந்தச் சந்திப்பில் சிவில் சமூகம் சார்பாகக் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் இறுதியில், ஐ.நா. பிரதிநிதிகளுடன் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துச் சொல்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்திக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.






-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’