மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு உறுகாமம் குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட திடீர் விஜயம் மேற்கொண்டபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கிருந்து நிலைமைகள் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த குளத்தில் 9 அடி நீளமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலைமை மோசமடைந்திருந்தது. நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உடனேயே எமக்கு தெரியப்படுத்தியதையடுத்து நாமும் ஏனைய அதிகாரிகளும் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டோம்.
அதிகமாக வெள்ளம் புகுந்த பிரதேசங்களான சித்தாண்டி வந்தாறுமூலை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரையில் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது பிரதான குளங்களான உன்னிச்சை வாகனேரி கட்டுமுறிவு உள்ளிட்ட குளங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் அயராத முயற்சியினாலும் மாவட்ட அரசாங்க அதிபர் சார்ல்ஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் லீவு நாட்களிலும் காரியாலயங்களை திறந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றமையாலும் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலதிகமாக ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு 200 மில்லியன் ரூபாக்களை பெற்று நிவாரண நடவடிக்கைளுக்கு ஒதுக்கியுள்ளோம். மக்கள் எவ்வித அச்சமும் பீதியும் கொள்ளத் தேவையில்லை. எவ்வகையான அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய தயார் நிலையில் உள்ளோம். முப்படையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.
குறிப்பாக வெள்ளத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் ஏக்கர் வயல்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து நிவாரணங்கள் வழங்கவுள்ளோம் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’