இ லங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார இன்றைய தினம் சாதனையொன்றைச் சமப்படுத்தினார். வேகமான 10,000 ஓட்டங்களை அடைந்தவர் என்ற சாதனையையே அவர் சமப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் பங்குபற்றிவருகிறது. இதன்போதே சங்கக்கார இந்தச் சாதனையைச் சமப்படுத்தினார்.
இன்றைய நாள் போட்டி ஆரம்பிக்கும் போது 194 இனிங்ஸ்களில் 9960 ஓட்டங்களைப் பெற்றிருந்த சங்கக்கார, மிற்சல் ஜோன்சனின் பந்தை 4 ஓட்டங்களுக்கு அடித்து 43 ஓட்டங்களைக் கடந்தபோது 10,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகியோரோடு இணைந்து, 195ஆவது இனிங்ஸில் 10,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்று விரைவான 10,000 ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தார்.
10,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடக்கும் இரண்டாவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார ஆவார். ஏற்கனவே மஹேல ஜெயவர்தன 10,000 ஓட்டங்களைக் கடந்திருந்தார். அவர் 210 இனிங்ஸ்களில் இதனைக் கடந்திருந்தார்.
ஏற்கனவே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள குமார் சங்கக்கார, அந்த மைல் கல்லையும் அவுஸ்திரேலிய அணிக்கெதிராகவே கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’