எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கை மக்கள் அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் டீ. எஸ். பொன்சேகா மாவத்தையில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் அரச ஊழியர்கள், தனியார் துறை மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காமையால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர். தற்போது கிடைக்கும் சம்பளம் வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது. மின் கட்டணம், நீர் கட்டணம் அதிகரித்துள்ளன. ஆனால் சம்பளம் மட்டும் அதிகரிக்கவில்லை. மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதிக்கோ, அமைச்சரவை அமைச்சர்களுக்கோ தெரியாது. அவர்கள் மக்கள் பணத்தில் சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். மக்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் கிடைப்பதில்லை. தற்போது கிடைக்கும் சம்பளம் அவர்களின் உயிர்களை பறிக்கும் சம்பளமாகும். விமானங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தரக் குறைவானதெனக் கூறி அதனை மண்ணெண்ணையாக மாற்றி விற்பனை செய்தனர். ஹெஜின் உடன்படிக்கையால் பல கோடி ரூபாக்கள் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மக்களே பலிக்கடாவாகியுள்ளனர். வீதிகள் செப்பனிடுவதற்காக 500 மில்லியன் டொலர் கடனாக பெறப்படுகிறது. இதில் 400 மில்லியன் அரசாங்க தரப்பு அரசியல்வாதியின் ""பொக்கெட்டை'' போய் சேருகிறது. 100 மில்லியன் டொலர்கள் மட்டுமே பாதை அபிவிருத்திப் பணிக்கு செலவு செய்யப்படுகிறது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக பாதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைக்கான நிதி உட்பட நலன்புரிகளுக்கான நிதிகளை குறைத்துள்ளது. மக்கள் இன்று வாழ்வதற்கு போராட்டம் நடத்துகின்றனர். அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடன் வாங்காதவர்கள் எவரும் இன்று நாட்டில் இல்லை. அந்தளவுக்கு மக்கள் துன்பத்தில் வாழ்கின்றனர். திருடர்களை பாதுகாக்கும் அரசாங்கம், உழைக்கும் வர்க்கத்தை பாதுகாப்பதில்லை. எனவே, தற்போது எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் சம்பளம் ரூபா 10,000 அதிகரிக்கப்பட வேண்டும். அதனை செய்தால் அரசுக்கு நன்றி செலுத்துவதோடு நலம் வேண்டி போதி பூஜையும் நடத்தத் தயாராகவுள்ளோம். அதனை செய்யாவிட்டால் ஐ. தே. க.வுடன் தொழிற்சங்கங்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடவும் தயாராகவுள்ளோம். சம்பள உயர்வை வலியுறுத்தும் அதேவேளை ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கா விட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான ஜோசப் மைக்கல் பெரேரா, டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். ஐ. தே. கட்சியின் இணைத் தொழிற் சங்கங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னரே இவ் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’