இலங்கையுடன் மிகவும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ள பங்களாதேஷில் ஒரு நாகரிகமற்ற செயல்களுக்கான இடமாக மாறியிருப்பது எதிர்பாராத ஒன்றாகும். எனினும் அங்கு இடம்பெற்ற பௌத்தர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தையிட்டு மிகவும் மனம் வருந்துகிறேன் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் முஸ்லிம்களால் பௌத்த விகாரை தீக்கிரையாக்கப்பட்டு பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்து இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் சபியுர் ரஹ்மானுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களைப் போல் பங்களாதேஷில் பௌத்தர்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். இந்நிலையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கெதிரான வன்முறைகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழிகோலும். ஆகவே பங்களாதேஷ் அரசாங்கம் பௌத்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி மதங்களுக்கு கௌரவமளிக்க வேண்டும். இலங்கையில் எமக்கு பாதுகாப்பும் மதச் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளானாலும் சரி அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளை கண்டிக்கின்றேன். இதற்கிணங்க உங்கள் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமெனவும் கோருகிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’