வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 அக்டோபர், 2012

நோர்வே சிறுவர் காப்பக விவகாரம்: தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: மகஜரும் கையளிப்பு



நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கையர்களைப் பாதுகாக்குமாறும் நோர்வே சிறுவர் காப்பகத்திடமிருந்து உண்ணாவிரதப் போராளிகளின் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்திய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்பாக இடம் பெற்றது .
இதன்போது மேற்படி உண்ணாவிரதப் போராளிகளின் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் நோர்வேயில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் இலங்கையர்களின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறவினர்களால் தூதரக உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் நலக் காப்பகமானது தமது குழந்தைகளை பலவந்தமாக எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தே நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகிய இரு தாய்மார் ஒஸ்லோவில் உள்ள டொம் என்றழைக்கப்படுகின்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை ஆறாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாரின் நிலைமை தற்போது மோசமடைந்து வருவதாக தெரிவிதக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே உண்ணாவிரதப் போராளிகளின் உயிரைப் பாதுகாக்குமாறும் காப்பகத்திடமிருக்கின்ற குழந்தைகள் மீண்டும் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இன்று வெள்ளிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நோர்வே அரசு சிறுவர்கள் விடயத்தில் தலையீடு செய்யுமாறு கோஷமிட்டதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டக் காரர்களின் மகஜரை ஏற்றுக் கொண்ட நோர்வே தூதரக அதிகாரி ஒருவர் இவ்விடயம் தொடர்பில் நோர்வே தூதரகம் உடனடியாகவே பதில் கூற முடியாத நிலையில் இருப்பதாகவும் இவ்விடயத்தினை தமது அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார். மகஜரை கையளித்த உண்ணாவிரத போராளிகளின் உறவினரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜேசு அமிர்த நாதன் கூறுகையில்; நாம் நோர்வேயின் சட்டங்களுக்கு மதிப்பளிக்கின்றோம். எனினும் நோர்வேயில் இயங்குகின்ற சிறுவர் காப்பகம் எமது உறவினர்களின் பிள்ளைகளை பலவந்தமாக எடுத்துச்சென்றிருக்கின்ற அதேவேளை அது நோர்வே சட்டத்தின் பிரகாரம் செயற்படவில்லை. இதனால் எமது உறவினர்களின் பிள்ளைகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த குழந்தைகளை மீட்டுக் கொள்வதற்காகவே தற்போது எமது உறவினர்கள் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களது உயிரைப் பாதுகாக்குமாறும் எமது பிள்ளைகளை மீண்டும் எம்மிடத்தில் ஒப்படைக்குமாறும் கோரியே நோர்வே தூதரகத்திடம் வேண்டுகின்றோம் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’