த மிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நீதிமன்றங்களில் தடை பெறாவிட்டால் விசாரணையைத் தொடர்வதற்கான உத்தரவைப் பிறப்பிப்பேன் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சோமராஜு எச்சரித்துள்ளார்..
தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சோமராஜு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு நாளைக்கு மட்டும் விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிசங்கர், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக மல்லிகார்ஜுனையா நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி சோமராஜூ, சிறப்பு நீதிபதி நியமனம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதை அறிவேன். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லையே என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை 2 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மணிசங்கர் வாதிட்டார். அரசுத் தரப்பு கடும் ஆட்சேபம் இதைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞரின் துணை வழக்குரைஞர் சந்தேஷ்செளட்டா, 1997-ல் இருந்து நடைபெற்று வரும் இந்த வழக்கை இழுத்தடிப்பதிலேயே எதிர்தரப்பு கவனமாக உள்ளது.2004-ல் இருந்து பெங்களூரில் விசாரிக்கப்படும் இந்த வழக்கில் 22 நாள்கள் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. 24 சாட்சிகளிடம் 14 நாள்கள் குறுக்கு விசாரணை நடைபெற்றது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன்படி, ஜெயலலிதாவிடம் 4 நாள்கள், சசிகலாவிடம் 7 நாள்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011, நவம்பர் மாதத்துக்குப் பிறகு 11 நாள்கள் மட்டுமே நீதிமன்றம் இயங்கியுள்ளது. தினமும் விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலில் கூறியுள்ளபடி, இதுவரை விசாரணை நடைபெறவில்லை. வழக்கு விசாரணையைத் தடை செய்து மேல் நீதிமன்றங்கள் உத்தரவிடாததால், சசிகலாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதில் குறுக்கிட்ட ஜெயலலிதா தரப்பு சிறப்பு வழக்குரைஞர் பி.குமார், மல்லிகார்ஜுனையாவின் நியமனம் செல்லாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவர் அளித்த தீர்ப்புகள் அனைத்தும் செல்லுபடியாகாது. உங்கள் விவகாரத்திலும் அது நடந்துவிடக் கூடாது என்பதால், விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி சோமராஜு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அடுத்த வாரம் வரவிருப்பதால், அடுத்த விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். ஆனால் அடுத்த விசாரணைக்குள், வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்றங்களின் தடையாணையைப் பெறாவிட்டால், விசாரணையைத் தொடர்வதற்கான ஆணையை செப்டம்பர் 18-ம் தேதி பிறப்பிப்பேன் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’