கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணையில் வாக்குமூலமளிப்பதற்காக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, அச்சுவேலி பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்க யாழ். நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதமன்றத்தில் நீதவான் க.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குகனின் மனைவியான முருகானந்தன் ஜெனதா மற்றும் லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜ் ஆகியோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து, இந்த வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், மேற்படி அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் உத்தரவிட்டார். குகன் மனைவி சாட்சியமளிக்கையில் கூறியதாவத 'லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரித்தார்கள். இந்நிலையில் கடந்த டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி வீட்டுக்கு வந்த லலித் யாழ். பஸ் நிலையத்துக்கு செல்வோம் என்று குகனை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அன்றைய தினம் இரவு 9 மணி ஆகியும் குகன் வீட்டிற்கு வரவில்லை. குகனின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தபோது, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நான் குகனின் நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விசாரித்தேன். மறுநாள் அஜித்குமார எம்.பி மற்றும் உதுல் பிரேமரட்ண ஆகியோர் யாழப்பாணம் வந்து லலித் மற்றும் குகன் எங்கே என்று கேட்டார்கள். லலித்துடன் யாழ்ப்பாணம் போய் விட்டார்கள் என்று சொன்னேன். தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினேன். பின்னர் மாலை 5 மணிக்கு அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன். பின்னர் யாழ்ப்பாணம் வந்து பார்த்தேன் அங்கும் அவர்கள் இல்லை. மீண்டும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு போய் முறைப்பாடு பதிவு செய்த பற்றுச்சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினேன். பின்னர் கோப்பாய் பொலிஸில் இருந்து அவர்களிருவரும் இறுதியாக பயணித்த மோட்டார் சைக்கிள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது' என்றார். லலித் தந்தை ஆறுமுகம் வீரராஜ் சாட்சியமளிக்கையில் கூறியதாவது, 'லலித், ஜயவர்த்தனா பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஜே.வி.பி. கட்சியுடன் இணைந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் காணாமல் போனோர்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். அதற்கு நான் பரவாயில்லை என்று கூறினேன். குடந்த டிசெம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போவதாக தெரிவித்தார். யாழ்ப்பாணம் போவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்திருந்தார். யாழ்ப்பாணம் சென்றவர் வீடு திரும்பவில்லை. தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட போது லலித் பேசவில்லை. தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் உதுல் பிரேமரட்ணவுடன் தொடர்பு கொண்டு கேட்டேன். 10ஆம் திகதி தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன்' என சாட்சியமளித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’