ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தபோது அவையில் இருந்து பதில் அளிக்காததற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மன்னிப்பு கேட்டார்.
ராஜ்சயபா நேற்று நண்பகலில் கூடியபோது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதவது பற்றி அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் பேசினார். முன்னதாக அவர் இந்த விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் அனுமதி பெற்றிருந்தார். யாராவது ஒரு உறுப்பினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவையில் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அதே நாளில் அல்லது பிறகு பதில் அளிக்க அனுமதிக்கப்படும். ஆனால் மைத்ரேயன் தீர்மானம் கொண்டு வந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அங்கு இல்லை. முறைப்படி நோட்டீஸ் கொடுத்தும் எஸ்.எம். கிருஷ்ணா அவைக்கு வரவில்லை. அவருக்கு தமி்ழக மீனவர்கள் விஷயத்தில் அக்கறை இல்லை என்று அதிமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கோஷமிட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி அலுவலகத்திற்கு சென்ற மைத்ரேயன் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த எஸ்.எம். கிருஷ்ணா ராஜ்யசபா தலைவரை சந்தித்து அவையில் பதில் அளிக்க வராததற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் அவை கூடும்போது பதில் அளிப்பதாகத் தெரிவித்தார். பிற்பகலில் அவை கூடியபோது எஸ்.எம். கிருஷ்ணா அங்கு இருந்தார். அப்போது பேசிய அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறுகையில், எஸ்.எம். கிருஷ்ணா தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பதில் அளிக்க அவருக்கு அனுமதி அளிக்கிறேன் என்றார். அதன் பிறகு கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு அல்லது கைது நடவடிக்கை மேற்கொண்டால், இந்திய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசி சுமுகத் தீர்வு காண்பர். மனிதாபிமானமற்ற வகையில் நமது மீனவர்கள் நடத்தப்படாமல் தடுப்பதை அவர்கள் உறுதிப்படுத்துவர். சில நாள்களுக்கு முன்பு, இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அது பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே அந்நாட்டு அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். விரைவாக செயல்பட்டு நமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். தற்போதைய நிலவரப்படி, அத்துமீறி கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக எந்தவொரு இந்திய மீனவரும் இலங்கைச் சிறையில் இல்லை. ஆனால், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் கைதான சிலர் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை கொழும்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை வரம்பை மதித்துச் செயல்பட வேண்டும். இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியான தேதியை தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட அமைப்புகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’