வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கிழக்கு தேர்தலில் முறைகேடு இடம்பெறாது; தேர்தல் ஆணையாளர் சம்பந்தனுக்கு அறிவிப்பு



கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பின்போதும் வாக்குகள் எண்ணப்படும் போதும் முறைகேடுகள் முடிந்த வரை இடம்பெற வாய்ப்பே இருக்காது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் நாட்டின் நீதித்துறையை நாடி நீதியைப் பெற்றுக்கொள்ளும் சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு தொலைநகல் மூலம் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறலாம் என்று அச்சம் தெரிவித்தும் ஆகவே நீதியாகவும் சுயாதீனமாதுமான தேர்தலை நடத்துமாறு சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடந்த புதன்கிழமை தொலைநகல் மூலம் அனுப்பிய கடிதத்தில் கோரியிருந்தார். அவர் தனது கடிதத்தின் பிரதி ஒன்றை தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்திருந்தார். அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே தேர்தல் ஆணையாளர், சம்பந்தனுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றார். தேர்தல் ஆணையாளர் தனது பதில் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, 'வாக்காளர்களை அச்சுறுத்துவது, வாக்காளர்கள் மீது செல்வாக்கு பிரயோகிப்பது, அரச சொத்துக்களை தவறாக துஷ்பிரயோகம் செய்வது போன்ற நீங்கள் குறிப்பிட்ட சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக நானும் மாவட்டங்களில் உள்ள எனது பிரதி மற்றும் உதவி ஆணையாளார்களும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாக்களிப்பு ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஒழுங்கு பற்றியும் வாக்காளர்கள் நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம் என்றும் வாக்காளர்கள் கோரப்பட்டுள்ளனர். வாக்களிப்புக்கு முதல் நாளும் வாக்களிப்பு தினத்தன்றும் தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீதும் வன்செயல்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையாளர் சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை ஜனாதிபதியின் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’