இ லங்கையின் வடபகுதி கடலில் இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய மத்திய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்துள்ளார்.
இந்தியா, இலங்கை இடையே வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் உயரதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட இந்திய உயர்குழுவொன்று இன்று அதிகாலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்ற வரவேற்புபசார நிகழ்வில் இலங்கை வந்த மேற்படி இந்திய குழுவினர் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியூதின் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா ஆகியோரை இன்று காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பின்போது இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைகடந்த அத்துமீறல்களை எடுத்துக்கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையினைக் கவனத்தில் எடுத்த இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இப்பிரச்சினைக்கு இருதரப்பினரினதும் உடன்பாட்டோடு விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்தார். இதன்போது உரிய தீர்வினை எட்டுவதற்கு முன்பாக இந்திய கடற்றொழிலாளர்கள் விசைப்படகில் பயன்படுத்தும் மடிவலை மீன்பிடிமூலம் வடபகுதி கடல் வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டபோது இவ்விடயம் தொடர்பாக தான் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இந்திய அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’