இலங்கையில் நடந்தபோரில் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு பழ.நெடுமாறன் போன்றோர் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் போர் நடந்தபோது நான் (கருணாநிதி) வாய் மூடிக் கொண்டிருந்தேன் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசை மீறி, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தீர்வு காண முடியும் என்பதை அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள்தான் உணர முடியும். புலிகளுக்கு இடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும், அதனால் தளபதிகளும் மாவீரர்கள் பலரும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும் நெடுமாறன் போன்றோர் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் நன்றாகவே அறிவர். நெடுமாறன் கூற்றின்படி நானாவது போரின்போது வாய் திறக்காமல் இருந்தேன் என்பது உண்மையாக இருக்கட்டும். ஆனால் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே தீர்மானம் கொண்டு வந்தார். அது நெடுமாறனுக்கு நினைவு இருக்கிறதா? இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், போர் என்றால் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஜெயலலிதா சொன்னார். அதாவது நினைவு இருக்கிறதா? மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்னைச் சந்தித்தபோது, தனி ஈழம் தொடர்பாக டெசோ மாநாட்டில் தீர்மானம் கூடாது என்று வலியுறுத்தியதாகவும், அதனை நான் ஏற்றுக் கொண்டதாகவும் நெடுமாறன் கூறியிருக்கிறார். இது பொய். சென்னை வரும்போதெல்லாம் என்னைச் சந்திக்கும் வழக்கமுடைய சிதம்பரம் அன்றும் என்னை அப்படித்தான் சந்தித்தார். மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பாக என்னிடம் அவர் பேசவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் வாழ்வாதாரம் பற்றி மட்டுமில்லை, உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்பதை உள்ளம் இல்லாதோர் அறிய நியாயமில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’