கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசுரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச்சேர்ந்த சிலர் நேற்று பறித்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடத்தில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று நான் எனது ஆதரவாளர்கள் சகிதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். பால்சேனை கிராமத்தில் நண்பகல் 12.00 மணியளவில் எனது கட்சி சார்பில் அந்த பிரதேசத்திலிருந்து போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான பரசுராமன் சிவனேசன் சகிதம் பிரசாரத்தில் ஈடுபட்டேன். நானும் அவரும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வேளை எமது ஆதரவாளர்கள் அங்கு தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். அவ் வேளை பச்சை நிற ஆட்டோ ஒன்றில் வந்த இரண்டு, மூன்று பேர் வரை அவர்களை அச்சுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பறித்து சென்றுள்ளார்கள். குறித்த நபர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதை என்னால் அறிய முடிந்தது. இந் நபர்களின் செயற்பாடுகள் அந்த பிரதேசத்தில் நாம் சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபடுவதற்கு இடையூறாக இருந்தது. குறித்த சம்பவமானது அந்த பிரதேசத்தில் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா? என்றொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே நாம் கருதுகின்றோம். எனவே அந்த பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்றாலும் சரி, சுயேட்சைக் குழுக்கள் என்றாலும் சரி சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார். இம்முறைப்பாட்டுக்கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மற்றும் கபே உட்பட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’