உ ள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள், சமீபத்தில் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைத்திருக்கிறார்.
அதன்படி, புதிய உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஷி்ண்டே வகித்து வந்த மின்சாரத்துறை, பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது. சிதம்பரத்தைப் பொறுத்தவரை, மூன்றரை ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நிதியமைச்சராகியிருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த, நிதியமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார் சிதம்பரம். நாட்டின் பொருளாதாரம் தேக்கமடைந்து, அன்னிய முதலீட்டாளர்களிடையே அச்சம் நிலவும் சூழ்நிலையில், புதிய சவால்களுடன் சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராகிறார். அதுதவிர, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டிய சவாலும் அவருக்குக் காத்திருக்கிறது. தற்போது, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’