தமிழ் மக்கள் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதன் மூலமே தமது உரிமையையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் மக்கள் மானமுடன் தலைநிமிர்ந்து வாழவே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, சீலாமுனையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த மாகாண சபைத் தேர்தலி;ல் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள். இந்த மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ஆதிக்கம் என்பது முஸ்லிம் தலைவர்களிடம் உள்ளது. அது தவறென்று நாங்கள் கூறவில்லை. அதே ஆதிக்கத்தை தமிழர்களும் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலமே எங்களது விகிதாசாரத்துக்குச் சமனான அபிவிருத்தியைக் கொண்டுவர முடியும். அரசாங்க அபிவிருத்திப் பணிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள். ஆகவே அரசாங்கத்துக்கு கூடுதல் விருப்பு வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும். மாகாண சபை மூலமே கூடுதலான அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தங்கியிருக்கின்றது. எனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தகுதியான, ஆற்றலுள்ள பிரதிநிதிகளை ஆக்கும் அரசாங்கக் கட்சியிலிருந்து தெரிவு செய்து அரசியல் ஆதிக்கத்தை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இதன் மூலமே ஜனாதிபதியின் கவனம் எமது பிரதேசத்தின் பக்கம் திரும்புவதோடு அதிகளவு அபிவிருத்தி நிதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அபிவிருத்தியில் இம்மாவட்டத்துக்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. தமிழ் அமைச்சராக அரசில் இருப்பதால் அதனை விகிதாசார அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் 2100 மில்லியன் ரூபா எமது தமிழ்ப் பிரதேச அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்ள முடிந்தது. அதில் தமிழ் அமைச்சராக நான் இல்லாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நாங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ள எதிர்க் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அந்தப் பணத்தை பிரிப்பதற்கு எதுவித உரிமையும் இல்லை. அவர்களுக்கு அதில் தொடர்பும் இல்லை. அது தொடர்பில் அவர்கள் குறையும் கூற முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துக்கு நேரடியாக வரும் நிதி. ஆகவே அந்த அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நாங்கள் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமே எமது அரசியல் அந்தஸ்து உயர்ந்து ஜனாதிபதியின் கவனம் எமது பக்கம் திரும்பும். எங்கள் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்க முடியும். இன்று அரசில் பதவியில் இருப்பதால் எமது மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடிகின்றது. நாம் அரசில் இருப்பதால் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் மானமுடன் தலைநிமிர்ந்து வாழவே அரசில் இணைந்து செயற்படுகின்றோம். சகல உரிமைகளுடனேயே நாம் அரசில் இணைந்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் பிரச்சினையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நான் முன்வைத்ததாலேயே இம்மாவட்டத்தில் மாத்திரம் பட்டதாரிகளின் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு வெறும் வீராப்புப் பேசுக்களைப் பேசி தமிழ்ச் சமூகம் எதனையும் சாதிக்க முடியாது. இந்நாட்டை ஆட்சி செய்த எந்த ஜனாதிபதியும் பெற்றுத்தராத பெருந்தொகை நிதிகளை - ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது மாவட்டத்துக்கு வழங்கி வருகின்றார். இத்தகைய சிறந்த ஜனாதிபதிக்கு ஆதரவு காட்ட எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சியான ஸ்ரீ.ல.சு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிபர் ருத்திரமலர் ஞானபாஸ்கரனை மகளிர் எழுச்சிக்கும் ஹென்றி பிரேவோராஜன் மயில்வாகனம் போன்றோரையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இவர்களை தெரிவு செய்ய தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தகவல் ஊடக அதிகாரி வீ.ஜீவானந்தன், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி வீ.ஈஸ்வரன் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’