இ லங்கையில் அரபு வசந்தத்தை உருவாக்கும் சதித்திட்டத்தை இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து சம்பந்தன் மற்றும் சரத்பொன்சேகா முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இந்தியாவில் பலாத்காரமாக எம் மீது சுமத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் தேவையா அல்லது இரத்துச் செய்யப்பட வேண்டுமா என்பது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இவ் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இலங்கை பிரிக்கும் சதித்திட்டம் இன்று அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்காகவே சிவ்சங்கர் மேனன், ஹிலாரி கிளின்டன் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சரத்பொன்சேகா உட்பட ரணில் விக்கிரமசிங்க , விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் வடபகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர். மக்கள் கிளர்ச்சியை வடபகுதியில் உருவாக்குவதற்கு அரசியல் அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கின்றனர். இவ் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் வடக்கின் இராணுவ முகாம்களின் முன்பாக, அம்முகாம்களை அகற்றவேண்டுமென வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் படையினருக்கிடையே மோதல்களை ஏற்படுத்தி உயிர்ப்பலிகளை உருவாக்கி அதன் பின்னர் வெளிநாட்டுத் தலையீடுகளை மேற்கொள்வதோடு வெளிநாட்டு இராணுவ முகாம்களை இங்கு அமைத்து நாட்டைத் துண்டு துண்டாகப் பிரிப்பதற்கே இவ்வாறு சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அண்மையில் வலிகாமம் இராணுவ முகாம் முன்பாக, முகாம் அகற்றப்பட வேண்டுமென மக்களைப் பயன்படுத்தி சுமந்திரன் எம்.பி. ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இலங்கையில் லிபியாவைப் போன்று மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தி அரபு வசந்தத்தை ஏற்படுத்துவதற்கே இவர்கள் முயல்கின்றனர். அரசியல், பொருளாதார ரீதியாக தென்பகுதியில் பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் அரசுக்கு எதிராக செயற்படமாட்டார்கள். எனவே தான் இச்சதிகாரர்கள் வடபகுதியைத் தெரிவு செய்துள்ளனர். புலி உறுப்பினர்கள் 11,000 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொழிலின்றி பொழுதைக் கழித்து வருகின்றனர். அத்தோடு வடக்கில் புதியதொரு இளைஞர் சமூகமும் உருவாகி வருகிறது. இதுதான் ஐரோப்பிய நாடுகளிலுள்ள உறவினர்கள் அனுப்பி வைக்கும் பணத்தில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டு பியர் அருந்தி பேஸ்புக் லெப்டொப் இணையத்தளங்களை பாவிக்கும் சமூகமாகும். அரசு வசந்தக் கிளர்ச்சிக்கு இக்குழுவினரையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்படுகிறது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மறுபுறம் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு சிவ்சங்கர் மேனன் அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ளதோடு இல்லா விட்டால் நவம்பரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இந்தியா நகர்வுகளை முன்னெடுக்குமென்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வழிகளில் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் இதற்கெல்லாம் அரசாங்கம் அடிபணியலாகாது. பதின் மூன்றாவது திருத்தம் எம் மீது இந்தியாவால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்டது. எனவே அதனை இரத்துச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையா? இல்லையா? என்பது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். அதனை விடுத்து அரசியலமைப்பில் தொடர்ந்து இத்திருத்தம் இருக்குமானால் நாடு பிரியும் ஆபத்தும் இருந்து கொண்டே இருக்கும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சிங்கள தேசிய அமைப்புக்களின் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’