இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000 த்துக்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ சி ஆர் சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15,780 பேரில் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பட்டியலில் 751 பேர் மகளிர், 1494 பேர் சிறார்கள் எனவும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.போர் முடிந்த பிறகு சுமார் 2,80,000 பேர் அரச முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் எனவும், அதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறும் ஐ சி ஆர் சி யின் அறிக்கை, இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இன்னும் கணக்கில் வராதவர்களின் விதி குறித்து ஒரு உறுதியான தகவலை உறவினர்களால் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கடும் நிபந்தனைகள்
இலங்கையில் அவசரகால நிலை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்கள், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.
மேலும் பலர், புனர்வாழ்வு நிலையங்கள் என்று அரசால் கூறப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும், அவர்களின் பெரும்பாலானவர்கள் கடந்த ஆண்டின் இறுதியில் விடுவிக்கப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற காலத்திலும், அது முடிவடைந்த உடனடி காலப்பகுதியிலும் தமது உறவுகளுடன் தொடர்புகளை இழந்த ஆயிரக்கணக்கானவர்கள் அது குறித்து செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும், அவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன எனவும் ஐ சி ஆர் சி யின் ஆண்டறிக்கை கூறுகிறது.
பேச்சுவார்த்தைகள்
காணாமல் போனவர்கள் குறித்து உரிய தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டங்கள் நடைமுறை படுத்தப்படுவதையும் தாங்கள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் ஐ சி ஆர் சி கூறுகிறது.
இதேவேளை போரினால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது இடங்களுக்கு மீளக்குடியேறாச் சென்றுள்ளவர்களும் அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சீரழிந்த நிலையில் உள்ளதையே காண்கிறார்கள் என்றும், தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் எனவும் ஐ சி ஆர் சி யின் ஆண்டறிகை தெரிவிக்கிறது.
அலுவலங்கள் மூடல்
மீள்குடியேற்றப் பகுதிகளில் தாங்கள் திட்டமிட்டிருந்த குடிநீர் விநியோகத் திட்டங்களை செயல்படுத்தக் கூட அரசு தடை செய்தது எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவிக்கிறது.
அதே போல பொதுமக்களின் நலன்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதையும் அரசு தடை செய்துள்ளது என்றும் அதன் அறிக்கை கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’