வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜூலை, 2012

மூதூரில் கொல்லப்பட்ட தொண்டு நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தல்



2006ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் ஊழியர்கள்; 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்ஸின் 'பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்த 17 பேரும் மூதூரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்போது கொலை செய்யப்பட்டிருந்தனர். திருகோணமலையில் அதே வருடத்தில் மற்றுமொரு சம்பவத்தில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது, அரசாங்க தூதுக்குழுவினர், இவ்விரு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் இணங்கினர். இச்சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸார் மீள் விசாரணையை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்த கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம், இவ்வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றத்தை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் விசாரணை செய்தது. இதன்படி கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்ரின் ரிபிச்சொன் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை தவிர்த்துக்கொள்ள முடியுமென திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். இது தொடர்பாக பல சர்வதேச அமைப்புகளின் முன்னிலையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புச்சபை இப்பிரச்சினையை எழுப்பியிருந்தன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’