கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகள் அனைத்தும் சுமார் மூன்றரை வருட கால பகுதிக்குள் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 285 முன்மொழிவுகளும் இந்த காலப்பகுதிக்குள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த முன்மொழிவுகள் 235 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக தேசிய வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதிலுள்ள முன்மொழிவுகள் 3 மாதங்கள், 6 மாதங்கள் 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் ஆகிய கால பகுதிக்குள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகள் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் முன்மொழிவிற்கமைய ஜனாதிபதி விசேட செயலணியொன்று கடந்த மே மாத நடு;ப்பகுதியில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான இந்த செயலணியில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர்கள் செயலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த மணிகேவ, நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தரா டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஏழு வாரங்களில் ஜனாதிபதி செயலணியினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, "ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தனியொரு அமைச்சினால் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. பல அமைச்சுக்கள் இணைந்தே முன்னெடுக்க முடியும். இதனாலேயே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் முன்மொழிவிற்கமைய ஜனாதிபதி விசேட செயலணி அமைக்கப்பட்டது. ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்தும் செயற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பத்திரிகை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், காணி அமைச்சு, சுகாதார அமைச்சு, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன. இதன் மூலம் அனைத்து அரச நிறுவனங்களும் இந்த செயலணியுடன் இணைந்து செயற்படும். இந்த முன்மொழிவுகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி 2013ஆம் ஆண்டு;க்கான வரவு செலவு திட்டத்தில ஒதுக்கப்படவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டடு விட்டதால் முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்க முடியாமல் போனது. எனினும் 2103ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதியின் ஊடாக ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும். இந்த அனைத்து முன்மொழிவுகளும் தேசிய கொள்கை, இறுதிக் கட்ட யுத்தம், மனித உரிமையும் தேசிய பாதுகாப்பும் மற்றும் மீள்குடியேற்றமும் தேசிய அபிவிருத்தியும் என நான்கு பாரிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக யுத்தத்தின் போது படையினர் ஏதாவது பிழை செய்திருந்தால் தண்டிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவின் 9.9ஆவது சரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு சட்டத்திற்கிணங்க விசாரிக்கப்படுவர். இதற்காக சுமார் 12 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர், இதன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 24 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும். இதற்கு 24 மாதங்கள் தேவைப்படும். இந்த செயற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து செயற்படவுள்ளன. இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட கால பகுதிக்கு முன்னர் இது நிறைவடைய முடியும். அதேபோன்று, காணி செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக நான்காவது காணி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 1927, 1936 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் காணி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைமுiயிலுள்ள காணி சட்டத்திற்கிணங்க, ஒருவர் காணியினை உரிமையாக்குவதற்கு சுமார் 40 செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். எனினும் புதிதாக அமைக்கப்படவுள்ள காணி ஆணைக்குழுவின் மூலம் மிக விரைவில் காணியின் உரிமையை பெற்றுக்கொள்ள முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை அரச நிறுவனங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் இந்த செயலணி கண்காணிப்பினையும் இணைப்பினையும் மேற்கொள்ளும். ஜனாதிபதி செயலணியினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் மக்கள் மயப்படு;த்தப்படும். அத்துடன் ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், அரசார்பற்ற நிறுவனங்களினால்; ஜனாதிபதி செயலணிக்கு கருத்துகளை தெரிவிக்க முடியும்" என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’