வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜூலை, 2012

பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்களை கிழித்தெறிந்ததை போல அரசு இன்று செயற்பட முடியாது: சம்பந்தன்



ண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கைகளை அன்று கிழித்தெறிந்தது போன்று இன்று நினைத்தபடி செயல்பட முடியாத நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தவறினால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மாகாண சபை தேர்தல் தொடர்பாக நேற்று புதன்கிழமை மாலை சம்பந்தன் தனது வாசஸ்தலத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு சம்பந்தன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "தந்தை செல்வாவின் சாத்வீக போராட்டத்தின் காரணமாக கைச்சாத்திடப்பட்ட பண்டாரநயகா -செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியன அப்போதைய அரசாங்கங்களினால் தன்னிச்சைப்படி கிழித்தெறியப்பட்டன. அன்று அவற்றிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஆட்சியாளருக்கு இருக்கவில்லை. இன்று ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கின்றது. மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுக்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சர்வதேச சமூகத்தின் வினாக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நடத்தப்படும் என்று கூறப்பட்ட வட மாகாண சபையின் தேர்தலை 2011, 2012 முடிந்து 2013 செப்டெம்பரில் நடத்த போவதாக அரசாங்கம் இப்போது கூறுகின்றது. 2013 புரட்டாசியில் நடத்தப்பட வேண்டிய கிழக்கு மாகாண சபையின் தேர்தலை ஒரு வருடம் முன்கூட்டியே நடத்துவதற்காக சபையை கலைத்திருக்கின்றது. வடக்கு மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த முடியாததற்கு காரணமாக நிலக்கண்ணி அகற்றல் முடியவில்லை என்றும் வாக்காளர் இடாப்பு தயாரிப்பு முடியவில்லை என்றும் அரசு காரணம் கூறுகின்றது. அவ்வாறானால் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் எல்லாம் எவ்வாறு வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டன? வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசு விரும்பாததற்கு காரணம் அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும். அவ்வாறு வெற்றியீட்டினால் அது அதிகப்படியான அதிகாரப்பகிர்வுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனை எப்படியாயினும் முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் பின்னடிக்கின்றது. அதற்கு பதிலாக கிழக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்தி வெற்றி பெற்று சிறுபான்மை மக்கள் அரசிற்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என்று காட்டி அரசியல் தீர்வு குறித்து சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்பதே அரசின் தந்திரோபாயமாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் பட்டியலில் இருந்து ஒரு தமிழரும் வெல்ல முடியாத நிலையை தமிழ் மக்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் மாத்திரமே வெற்றி பெறுவதை தமிழ் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத் தமிழ் வாக்காளர்களில் 95 சதவீதமானோர் வாக்களித்தால் இச்சாதனையை நிகழ்த்த முடியும். இதன் மூலம் நீண்ட காலமாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் முயற்சிக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும்" என அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் மூத்த கல்வியிலாளர் சி.தண்டாயுதபாணியும் பங்குபற்றி உரையாற்றினார். சி.தண்டாயுதபாணி - திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் அதிபராக பல வருடங்கள் பணியாற்றியவர். பின்னர் வவனியாவில் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் அதன்பின்னர் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் சிரேஷ்ட உதவிச்செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது ஜி.ரி.இசட். அமைப்பில் நிபுணத்துவ கல்வி ஆலோசகராக கடமையாற்றி வருகின்றார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் முன்னர் கடமையாற்றிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’