வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிலர் இலஞ்சம் பெற்றுள்ளதாகவும் அது அரசுக்கு இழிவை ஏற்படுத்தும் செயல் எனவும் அது விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சி
மாவட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நேற்றைய தினம் நியமனப் பத்திரங்களை
வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னர் பல்கலைக் கழகங்களில் தவறான வழிநடத்தல்கள் மற்றும் யுத்த சூழலுக்கு மத்தியில் கல்வி கற்றுப் பட்டங்களைப் பெற்றுள்ளீர்கள். அன்று வேறொரு சூழல் இன்று வேறொரு சூழல் என இருவேறு காலகட்டங்கள் இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த வாழ்வியல் உரிமையைப் பெற்றுள்ளீர்கள் என்பதுடன் இதனூடாக செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் அதேவேளை சமூகக் கடமையை உணர்ந்துகொண்டு குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு கடமைகளை திறமையாகவும் சிறப்பாகவும் செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இதனிடையே இந்த நியமனங்களைப் பெற்றுத்தருவதாக கூறி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிலர் உங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. இது அரசின் மீது திட்டமிட்ட ரீதியில் இழிவை ஏற்படுத்தும் செயல் எனவும் இவ்வாறு இலஞ்சம் பெறுவதோ அல்லது கப்பம் பெறுவதோ எமது நோக்கம் அல்ல எனவும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிசாரிடம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் முன்னைய அரசுகள் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பினராக எண்ணியதாகவும் தற்போது அந்த நிலை மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளை பேச்சுவார்த்தைகளுக்கூடாகவும் புரிந்துணர்வுக்கூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இணக்க அரசியலுக்கூடாக தாம் பல விடயங்களைச் சாதித்துள்ள நிலையில் மேலும் சாதிக்க முடியுமென்றும் தெரிவித்தார். அத்துடன் ஏ9 வீதி இவ்வருட இறுதிக்குள் புனரமைக்கப்பட்டுவிடும் என்பதுடன் இவ்வீதிப் புனரமைப்பும் வடபகுதி அபிவிருத்தியின் ஒரு படிக்கல்லே என்றும் தெரிவித்தார். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாழ்த்து உரையினை பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நியமனப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முருகேசு சந்திரகுமார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் வழங்கிவைத்தனர். நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த நூற்றிப்பதினான்கு (114) பட்டதாரிகளுக்கு நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதன்போது கிளிநொச்சி மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் தவநாதன் யாழ் மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’