வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஜூலை, 2012

வடக்கின் சிறந்த தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அமைச்சர் சந்திரசேன


டக்கின் சிறந்த தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றும், நாட்டின் மிகச் சிறந்த விவசாயிகளைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்குவதாகவும் கடற்தொழில் மற்றும் வனஜீவிகள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கீரிமலை கமநல சேவைகள் நிலையம் இன்றையதினம் தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கென அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் மின்சாரம், வீதிப்புனரமைப்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வடபகுதியின் விவசாய மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, மேலும் 500 நான்கு சில்லு உழவு இயந்திரங்களையும், இரண்டு சில்லு உழவு இயந்திரங்களையும் பெற்றுத்தருவதற்கும் இங்குள்ள குளங்கள், கிணறுகள்  போன்ற நீர்நிலைகளை துப்பரவு செய்து தருவதற்கும் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம்.

முன்னைய அரசுகள் விவசாயத்தில் அக்கறைகாட்டாத போதிலும், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு விவசாயத்திலும், விவசாயிகளிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இன்று நெற்செய்கையாளர்களுக்கு உரமானியத்தைப் பெற்றுக்கொடுப்பது போல் எதிர்காலத்தில் நீர்ப்பாசனத்துடன் கூடிய ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவோருக்கும் உரமானியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் 5000 ஏக்கர் காணியில் சோளச் செய்கையை மேற்கொள்வதுடன், இவ் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே தமது எண்ணம் என்றும் எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் விவசாயத்தை விரிவாக்கம் செய்யவுள்ள அதேநேரம் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ் மாவட்ட விவசாயிகள் நல்லூக்கமும், திறன் படைத்தவர்களாகவும் விளங்கி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இப்பகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இப்பகுதியில் அபிவிருத்தியில் இணைந்து செயற்படுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இதன்மூலம் இப்பகுதியின் அபிவிருத்தி மட்டமல்லாது முழு நாட்டின் அபிவிருத்தியும் உயர்வடையும் என்றும் தெரிவித்ததுடன், இவ்வாறான வளர்ச்சியை விரும்பாத சிலர் பிரிவினைவாதக் கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எமது அமைச்சில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கின் சிறந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

வலிகாமம் வடக்குப் பகுதியில் மக்கள் குடியேறிவரும் விவசாய நிலங்களை அதிகமாகக் கொண்ட இப்பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 8.9 மில்லியன் ரூபா செலவில் இக் கமநல சேவைகள் நிலையம் அமைக்கப்பட்டு  திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய இப்பகுதி விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு இந்நிலையம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி விவசாயிகள்  நன்மையடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கமநல சேவைகள் மாவட்ட உதவி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஆணையாளர் நாயகம் வியஜசிங்க, மாவட்ட மேலதிக அரச அதிபர், கமத்தொழில் வனஜீவிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் முகைதீன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஆகியோர் உடனிருந்தனர்.

நிறைவில் வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர்ந்த மக்களின் வீட்டுத் தோட்டத்திற்கான கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சினதும், கமநல சேவைகள் திணைக்களத்தினதும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’