வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஜூலை, 2012

கிழக்குத் தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கியோர் இம்முறையும் அதற்கே முயற்சி :சந்திரகாந்தன்


கி ழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவங்களையும் அம் மக்களுக்கான அரசியல் முகவரிகளையும் இல்லாதொழித்தவர்கள் இம்முறையும் அதனை செய்வதற்காகவே முயற்சிக்கின்றனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று கல்குடாத் தொகுதியிலுள்ள த.ம.வி.பு. கட்சியின் ஆதரவாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், 1977ஆம் ஆண்டு எம்மையெல்லாம் உணர்ச்சிவசப்படுத்தி எல்லோரையும் ஒன்று சேர்த்து எதிர்க்கட்சியாக அமர்த்திய பெருமைக்குரியவர்களாக இருந்தார்கள். ஆனால், அதனால் என்ன பயன் கிடைத்தது? எதுவுமே இல்லை. நாம் அழிவுகளையும் இழப்புகளையுமே சந்தித்தோம். இதே போன்று காலங்காலமாக பல்வேறு வழிகளிலும் எமது மாகாண மக்களை பகடைக் காயாகவே பயன்படுத்தியிருந்தார்கள். இதே முறைமையைத் தான் தற்போது நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே சாதிக்கப் போகின்றார்கள். கடந்த நான்கு வருட ஆட்சியிலே நாம் கண்ட அபிவிருத்திப் பணிகள் எல்லாம் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டன. அதாவது சுமார் 30 வருட கால இழப்புக்கான ஒரு தீர்வாக அமையாவிட்டாலும் அதுவே எமது மக்களின் அபிவிருத்தி மற்றும் அரசியல் வளர்ச்சியின் முதற்படி எனலாம். ஒரு சமூகம் அரசியலின்றி வளர்ச்சியடைய முடியாது. அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு கடந்த நான்கு வருட கால முதலமைச்சர் ஆட்சிக் காலம் என்றால் அது மிகையாகாது. கிழக்கு மாகாணம் தற்போது அனைத்துத் துறைகளிலுமே ஓரளவேனும் அபிவிருத்தி கண்டு வருகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது உண்மையில் எவ்வாறு நிகழ்ந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும். எம் மக்களுக்கான ஓர் அரசியல் பலம் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது. அதனாலேயே பல வளர்ச்சிப் படிகளை எம்மால் எய்த முடிந்தது. இதனை நாம் முதலில் கருத்திற் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் சிந்திக்காது நாம் மீண்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு ஆதரவு அளித்தால் தற்போது நாம் ஓரளவேனும் கண்டு வருகின்ற அபிவிருத்திகள் முற்றாகத் தடைப்பட்டு விடும். இததைத்தான் தற்போது கொள்கைக்கும் அப்பால் சென்று தேர்தலிலே போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்னவென்றால் கிழக்கில் மக்கள் நிம்மதியாக வாழக் கூடாது. அதாவது அவர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடாது, எதற்காகவும் கிழக்கு மக்கள் சுதந்திரமாக அரசியல் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவும் கிழக்கை கிழக்கான் நிர்வகிக்கக் கூடாது என்பதற்காகவும் தான் அவர்கள் இம்முறை தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள். இதனை எம் கிழக்குத் தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். தொடர்ந்து எமது மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நாங்கள் எங்களை ஆள வேண்டும். அத்தோடு அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மக்களின் உரிமை மற்றும் அரசியல் அபிலாஷைகளை இல்லாதொழிக்க முடியாது. எம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனோடு இணைந்த வகையில் எம் மக்களுக்கான அபிவிருத்தியையும் நிம்மதியான ஒரு சுபீட்சமான எதிர்காலத்தையும் நாம் வேண்டி நிற்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை ஆகும். எனவே இம்முறை தேர்தலிலே நீங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தருணமிது எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் வாழைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் மற்றும் த.ம.வி.பு. கட்சியின் பிரசாரச் செயலாளர் ஆஷாத் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’