இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் தரங்க ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றதோடு டில்சான் 50 ஓட்டங்களை பெற்றார்.
ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாத குலசேகரவிற்கு பதிலாக இசுரு உதான அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 33.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கம்பீர் அதிகூடுதலாக 65 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீச்சிய மெத்தியூஸ் மற்றும் பெரேரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 139 எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான் 50 ஓட்டங்களை பெற்று அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தரங்க 59 ஓட்டங்களையும் சந்திமால் 6 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். சிறப்பாக பந்து வீசிய திசேர பெரேரா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட இத் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளை வெற்றிக் கொண்டு சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி கொழும்பு கெத்தாராம மைதானத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’