வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஜூலை, 2012

23ஆவது வீரமக்கள் தின செய்தி



னைவருக்கும் வணக்கம்! sitharthanதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இறந்தநாளான யூலை 13ஆம் நாள் தொட்டு, எங்கள் செயலதிபர் தோழர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்தநாளான யூலை 16ஆம் நாள் வரையிலான காலப்பகுதியினை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நிறைவு கூரும் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்து ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றோம்.
சுவிஸ் நாட்டிலும் எமது இயக்கம் இந்த நினைவு தினத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வருகின்றது. அங்கு நடைபெறுகின்ற இந்த நினைவுதினத்தை ஒட்டிய சிறார்களுக்கான கல்விப் போட்டிகள், கலை நிகழ்வுகளில் பெருவாரியான சிறுவர்களும், பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றார்கள். உயிரிழந்தவர்களை மிகவும் ஆழமாக நேசித்து அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்வில் கடந்த காலங்களில் நானும் இங்கு வந்து கலந்து கொண்டிருந்தேன். எம்மவரின் இந்த உயிரிழப்புக்கள் எல்லாம் விரயமாகிப் போய்விடக் கூடாது என்ற கவலையும் பயமும்தான் இன்று தமிழ்மக்கள் ஒவ்வொருவருடைய மனத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழ்மக்களின் போராட்டத்தினால் உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும், பலர் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டதுமாக மிகப் பெரிய அழிவுகளைக் சந்தித்திருக்கின்றோம். இந்த அழிவுகளை மனதிற்கொண்டு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு, எமது அடிப்படைக் கோரிக்கையையாவது வென்றெடுக்க முயலவேண்டும் என்ற ஒரேயொரு அவாதான் எங்கள் மனத்திலே இருக்கின்றது. தொடர்ந்தும் இந்த அழிவுகளை அரசியல் மயப்படுத்தி ஆதாயம் பெறுவதை நாங்கள் ஒவ்வொருவரும் தவிர்த்துக் கொண்டு, இன்று வாழ வழியின்றி என்ன நடக்குமென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான மக்கள் தாங்கள், தங்கள் கால்களிலே மீண்டும் நிற்கின்ற ஒரு நிலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் பல பெண்கள் தங்கள் கணவன்மாரை, குழந்தைகளை இழந்து தனி மரமாக தங்களுடைய குடும்பங்களைத் தாங்கிநிற்கின்றார்கள். இவர்களுடைய வாழ்வு கேள்விக்குறியிலேயே யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இருந்து கொண்டிருக்கிறது. வாழ்வதற்கு வீடோ அல்லது ஒரு தொழிலோ இன்றி எந்தவித வருமானமுமற்று ஏறக்குறைய எண்பதாயிரம் விதவைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்லமுடியாது உயிருடன் இருக்கின்றார்கள் என்றுதான் கூறமுடியும். இங்கு வாழுகின்ற எங்கள் மக்கள் படுகின்ற அவலங்களையெல்லாம் மனத்திற் கொண்டு புலம்பயெர் நாடுகளில் வாழக்கூடிய எங்கள் உடன்பிறப்புகள், இந்த நிர்க்கதியான மக்களை வாழ வைப்பதற்கு தங்களால் இயன்ற உதவியைத் தன்னும் செய்ய வேண்டுமென்பதுதான் அவர்களுக்கு இன்று இருக்கின்ற கடமையாகும். புலர்பெயர் மக்களில் சிலர் தங்களால் இயன்ற உதவிகளை தனிப்பட்ட முறையிலே செய்து வருகின்றார்கள் என்பது நாங்கள் நன்கு அறிந்தவிடயமாகும். ஆனாலும் புலம்பெயர் நாடுகளில் வாழக்கூடியவர்கள் அனைவரும் மனது வைத்தால் இந்த மக்கள் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கு முழுமையான உதவிகளைச் செய்ய முடியும் என்றே நான் கருதுகின்றேன். அரசியல் தீர்வொன்று வந்து அந்த தீர்வின் அடிப்படையில் வரக்கூடிய வடகிழக்கு அரசோ, நிர்வாகமோ இதனைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று நாம் இன்று இருக்கின்ற நிலைமைகளை பாராமுகமாக இருந்தால், இந்த மக்கள் ஓர் சீரழிந்த வாழ்க்கையை நோக்கியே செல்வார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு தமிழ் மகனுக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. இன்று இருக்கின்ற அரசு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கும் என்று இங்கு இருக்கின்ற எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சிகளும் நம்பவில்லை. யுத்தம் இருந்த காலத்தில்கூட இல்லாதஅளவு சர்வதேசத்தின் பார்வை எங்களுடைய பிரச்சினையை நோக்கி இன்று திரும்பியிருக்கின்றது. இதை நாம் சரியான முறையில் பாவித்து ஒரு அரசியல் தீர்வை எட்டத் தவறுவோமேயானால் நீண்ட காலத்திற்கு ஒரு நியாயமான தீர்வை எட்டமுடியாது என்பதே என்னுடைய கருத்தாகும். புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய மக்களும், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கின்றவர்களும் ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதை நோக்கி தங்களுடைய நகர்வுகளை முன்னெடுப்பதன்மூலம் இலங்கை அரசுமேல் ஒரு தீர்வை நோக்கிய அழுத்தத்தைக் கொடுக்கமுடியும். இலங்கையில் வாழுகின்ற தமிழர்களைப் பொறுத்தமட்டில் சகலவிதமாகவும் அது அரசியலாகட்டும், பொருளாதாரம் ஆகட்டும், எண்ணிக்கை ஆகட்டும் நாங்கள் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கிறோம் என்ற உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று சர்வதேச அழுத்தமும், நம்மிடையே இருக்கின்ற ஒற்றுமையாலும்தான் ஒரு தீர்வை எட்டமுடியும் என்று நான் நம்புகிறேன். ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுதான் எங்கள் மக்களுடைய அழிவுக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாக இருக்கும். நன்றி தர்மலிங்கம் சித்தார்த்தன், தலைவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், 08.07.2012.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’